மதுரை தெற்குவாசல் தேவர் பாலம் அருகே உள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்ற குண்டுமணி (40), பிரேம்குமார் (43), திருப்பதி என்ற கவாத்து திருப்பதி (44), செல்வகணேஷ் (48) ஆகிய நான்கு பேரும் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர்.
இவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், லோடுமேன், ஆட்டோ ஓட்டுநர்கள் என அனைவருக்கும் சில்லரையாக கஞ்சா விற்பனை செய்துவந்துள்ளனர். இந்நிலையில், ஜெய்ஹிந்த்புரம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதிக்கு ரோந்து சென்றபோது, அந்த நபர்கள் கஞ்சா விற்றுக்கொண்டிருந்துள்ளனர்.
அதைக் கண்ட காவலர்கள் நால்வரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்த 22 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல் துறையினர் நால்வரையும் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
செல்வகணேஷ் தவிர்த்து மற்ற மூவர் மீதும் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படங்க: கஞ்சா வாங்க பணம் தர மறுத்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்!