மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'இந்தியா முழுவதும் மூன்று முறை பயணம் செய்த ஆதிசங்கரர் சமாதி கேதார்நாத்தில் அமைந்துள்ளது.
வெள்ளம் காரணமாக கேதார்நாத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டு சீரமைக்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இன்றைக்கு 13 அடி சிலையையும் கேதார்நாத்தில் அமைத்துள்ள மோடி, தொடர்ந்து பல்வேறு மேம்பாட்டுப் பணிகளையும் தொடங்கி வைத்துள்ளார்.
உள் அர்த்தம் இல்லை
பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு என்பதில் உள் அர்த்தம் காட்டி விவாதிக்க வேண்டியதில்லை. பல சிரமங்களுக்கு மத்தியில் இந்த விலைக் குறைப்பு கொண்டு வந்திருப்பதை அனைவரும் வரவேற்க வேண்டும்.
அனைத்து செயல்பாட்டிற்கும் சில காலங்கள் உண்டு. வரி மக்கள் பயன்பாட்டிற்குச் செலவிடப்படுகிறதா என்றுதான் பார்க்க வேண்டும். ஒவ்வொரு மாநில அரசும் விலைக்குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதுபோலவேதான் பெட்ரோல், டீசல் விலையில் திமுக அரசின் செயல்பாட்டைப் பார்க்க வேண்டும். குறிப்பாக, பாஜக இந்தியா முழுவதும் 17 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. அங்கேயும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளனர்.
மோடி அரசு வரி திணிப்பை மேற்கொள்ளாது
உத்தரப்பிரதேச தேர்தலுக்காக இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்ற நமது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும். எந்த வரியைக் குறைத்தாலும் பொதுமக்கள் வரவேற்கத்தான் செய்வார்கள். எந்தவித வரி திணிப்பு நடவடிக்கையையும் மோடி அரசாங்கம் செய்யாது.
விலைக்குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பைச் சமாளிக்கும் திறன் கொண்டவர், பிரதமர் மோடி.
உலகப் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பல நிறுவனங்கள் தெரிவிக்கும் கருத்துகளைக் கவனத்தில் கொண்டும், தொடர்ந்து மோடி அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது' என்றார்.
இதையும் படிங்க: 'பொன்.ராதாகிருஷ்ணன் இன்னொரு காமராஜர்' - நமீதா