மதுரை விளாங்குடி பகுதியில் ஆர்.ஜே.தமிழ்மணி சாரிட்டபிள் அன் எஜூகேஷனல் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது மனைவி ஜெயந்தி ராஜூ, மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற லட்சியத்துக்காக தொடங்கப்பட்டது அதிமுக. கட்சிக்குள் ஒரு தலைவர், நிர்வாகியை நீக்குவது சாதாரணம்.
அதுபோலத்தான் கருணாநிதி எம்ஜிஆரை நீக்கினார். நீக்கப்பட்ட எம்ஜிஆருக்கு பொதுமக்கள் அமோக ஆதரவை கொடுத்தனர். சாதாரண இயக்கமல்ல அதிமுக. இது திராவிட பூமி. தந்தைப் பெரியாரின் திராவிட உணர்வு நிறைந்த மண்.
மாற்று சக்தி வரக்கூடாது என நினைத்த பெரியாரின் சீர்திருத்த கொள்கைகளை கடைபிடிப்பது அதிமுக.
எத்தனையோ சட்டதிட்டங்கள் உள்ள அதிமுகவிற்கு எம்ஜிஆர் உயில் எழுதி வைத்துள்ளார். 80 விழுக்காடு யார் ஆதரிக்கிறார்களோ அவருக்குத்தான் ஆதரவாக இருக்க வேண்டும் என உள்ளது. அழுவது போல தழுதழுத்த குரலில் பேசுகிறார்.
அதிமுக இயக்கம் வீழாது. புத்தெழுச்சியோடு மீண்டும் வரும். தொண்டர்களை பிரித்துச் செல்ல முடியாது. அகில இந்திய கட்சிக்கோ மாற்றுக்கட்சிக்கோ தொண்டர்களை அழைத்துச்செல்ல முடியாது. திமுகவில் எளிய தொண்டன் முதலமைச்சராக முடியுமா...?, அந்தக்கட்சியில் ஜனநாயகம் உள்ளதா..?, திமுக ஆட்சியில் ஊடக சுதந்திரம் சினிமா சுதந்திரம் உள்ளதா...?
அதிமுக தொண்டர்கள் சாதி, மத இனத்தைச் சொல்லி பேசுபவர்களுக்கு இடம் தராதீர்கள்: தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். உணர்ச்சி வசப்படக்கூடாது. அதிமுக தொண்டர்கள் சாதி, மத இனத்தைச் சொல்லி பேசுபவர்களுக்கு இடம் தராதீர்கள். சாதி மதம் சாராதவர்கள் அதிமுகவினர். பிராமணப்பெண்ணை தலைமையாக கொண்டு செயல்பட்ட இயக்கம் அதிமுக. அவர் தான் 69% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.
கட்சிக்காக சத்யா ஸ்டூடியோவில் உழைத்து சம்பாதித்த பணத்தை எழுதி வைத்தவர், எம்ஜிஆர். திமுக ஒரு தீய சக்தி. எம்ஜிஆரின் ரசிகர்களே கழகத் தொண்டர்கள், இயக்கத்தை ஆழமாக நேசிப்பவர்கள் எங்கள் பக்கம் உள்ளார்கள். காசுக்கு வேஷம் போடுபவர்கள் எங்கள் பக்கம் இல்லை.
அதிமுக ஆயிரங்காலத்து பயிர். தமிழ்நாட்டில் மற்ற கட்சிகள் சுயநலத்தோடு செயல்படுகிறது. அதிமுக அப்படி இல்லை. அதிமுக கட்சியின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறிய தி.க தலைவர் வீரமணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிமுகவில் சாதி, மத வேறுபாடு பார்ப்பதில்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்கி அழகு பார்த்தது, அதிமுக. சாதி மதத்தைச் சொல்லி அதிமுகவை அழிக்க பார்க்கிறார்கள். நாயரான எம்ஜிஆரும் பிராமணப் பெண்ணான ஜெயலலிதாவும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போன்றோரை தலைவராக்கி அழகு பார்த்த கட்சி அதிமுக.
இந்த இயக்கத்தைச் சாதி மதத்தின் பெயரைச் சொல்லிப்பிரிக்க முடியாது. அதிமுகவை எந்த ஒரு மாநிலக்கட்சியாலோ தேசிய கட்சியாலோ அசைக்க முடியாது, அழிக்க முடியாது” எனப் பேசினார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 13ஆவது முறையாக கால அவகாசம் நீட்டிப்பு