மதுரையில் கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார் ஆய்வுசெய்தார். அதனைத்தொடர்ந்து மருந்து இருப்பு தொடர்பாக மருத்துவரிடம் விவரம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மதுரையில் பல்வேறு தடுப்பூசி மையங்களில் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசிடம் போதிய அழுத்தம் கொடுத்து தேவையான தடுப்பூசிகளைப் பெற்று தற்போது தலையாய கடமையாகச் செய்திட வேண்டும்.
ஏனென்றால் தடுப்பூசிதான் மக்களின் உயிர்க் காக்கும் கவசமாக உள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் எத்தனை விழுக்காடு என்பதை ஒப்பிட்டு தடுப்பூசி தொடர்பாக எந்த விவாதமும் செய்யாமல் நமக்குத் தேவையானதைச் சாணக்கியத்தனமாக மதிநுட்பத்துடன் மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும்.
ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி மருந்தை தருவது மத்திய அரசா, மாநில அரசா என்பது முக்கியமில்லை. வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நாள்தோறும் ஒரு கோடி பேருக்குச் செலுத்தும் அளவிற்கு போதிய தடுப்பூசி கையில் இருக்கும் என்று ஒன்றிய அரசு தெரிவித்திருப்பது நமக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
மக்கள் உயிரைக் காப்பதில் நாம் அனைவரும் போர்க்கால அடிப்படையில் ஒரே நேர்கோட்டில் சிந்தனைகளும், செயல்களும், அமைந்திட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது" என்றார்.