மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மக்களுக்கு கபசுரக் குடிநீரை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்பு குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:'பேரிடர் காலங்களில் மக்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வது எதிர்க்கட்சிகளின் பிரதான கடமை. அரசு மேற்கொள்ளும் பயனுள்ள திட்டங்களை வரவேற்கத் தயங்கியது கிடையாது. அதேபோல் மறைத்ததும் இல்லை.
ஆளுங்கட்சிப் பணிகளில் களங்கம் கற்பிக்கவில்லை. ஆனால், மக்களின் கவலைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து வரும் பணிகளைத்தான், அரசியல் உள்நோக்கம் இன்றி மேற்கொண்டு வருகிறோம்.
அந்த இலக்கணத்தின் அடிப்படையில், எங்கள் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பணி மூலம் யாரையும் காயப்படுத்துவதோ, அவதூறு பரப்புவதோ, பழி சுமத்துவதோ, யாரையும் குறைத்து மதிப்பிடுவதோ எங்கள் நோக்கம் அல்ல.
மருத்துவ கட்டமைப்பை அதிகப்படுத்த வேண்டும்:
தற்போது மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நோய்த்தொற்றுப் பரவுவது கவலை அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆகவே, மதுரை மாவட்டத்தில் மருத்துவ கட்டமைப்பை மாவட்ட நிர்வாகம் அதிகப்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் நோய்த்தொற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடுப்பூசி போடுவதில் சிக்கல்:
மதுரை மாவட்டத்தில் 18 வயதானவர்களுக்கு தடுப்பூசி மேற்கொள்ளும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்கள், கரோனா தடுப்பு முகாம்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். தடுப்பூசி செலுத்தும் பணியில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, கூட்டத்தை ஒழுங்குபடுத்த முடியவில்லை. அதேபோல் எவ்வித ஏற்பாடும் செய்யப்படவில்லை.
ஏராளமானோர் குவிந்ததால் சமூக இடைவெளி இல்லாமல் பல இடங்களில் இடநெருக்கடி ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. மதுரையில் நகர்ப்புறங்களில் புதூர் உள்ளிட்ட இடங்களில் இது போன்று நடைபெற்று உள்ளது. மதுரை மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லூரி வளாகம் போன்ற விரிவான இடவசதி உள்ள மையங்களில் தடுப்பூசி முகாமை ஏற்படுத்திட வேண்டும்.
தற்போது 18 வயது முதல் 45 வயது உள்ளவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி போட உரிய விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்து, அதை முறையாக அறிவிக்கும் பட்சத்தில் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’ என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா 2ஆவது அலையில் நுரையீரல் பாதிப்புகள் எப்படி இருக்கும்?