சென்னை: பிரபல நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (நவ.09) இரவு சென்னை ராமாபுரத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார். இரவு 11.30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 400க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் டெல்லி கணேஷ்.
அவரது மறைவுக்கு நடிகர் கார்த்தி மற்றும் சந்தான பாரதி உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் நடிகர் அஜித் சார்பில் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா அஞ்சலி செலுத்தினார். "நடிகர் அஜித் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருப்பதால் அவரது சார்பாக அஞ்சலி செலுத்தியுள்ளதாக" சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரைப்பிரபலங்கள், டெல்லி கணேஷ் உடனான தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் கார்த்தி: "எங்களுடைய பாக்கியம். கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் டெல்லி கணேஷ் அவர்களின் நடிப்பைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினோம். அப்போது மகிழ்ச்சியுடன் பல விஷயங்கள் குறித்துப் பேசினார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை முழுமையாக செய்யக்கூடிய ஒரு நடிகர். அவர் மருத்துவமனைக்குச் சென்று கஷ்டப்படாமல் தூக்கத்திலேயே இறந்தது தான் சந்தோசமான ஒரு விஷயமாக நான் பார்க்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்" என்றார்.
இயக்குநர் சந்தான பாரதி: "எனக்கு மிக பெரிய நெருக்கமான நடிகர். எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும், எதில் நடிக்கக் கூடாது என்பதில் அவருக்கென்று ஒரு கட்டுப்பாடு இருக்கும். அவரது இழப்பு எனக்கு மிக வருத்தமான ஒரு விஷயமாகும்"
நடிகர் ரமேஷ் கண்ணா: "இது மாபெரும் இழப்பு. நான் அவருடைய நெருங்கிய நண்பர். ஏதுவாக இருந்தாலும் என்னிடம் தான் அழைப்பு விடுத்து பேசுவார். நிகழ்ச்சிகளுக்கு செல்லமுடியவில்லை என்றால் என்னைத் தான் அழைத்து செல்ல வைப்பார். நாடகங்களில் கூட கண் கலங்க வைத்த நடிகர்” என்றார்.
இதையும் படிங்க: பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவு: சாலமன் பாப்பையா நேரில் அஞ்சலி!
நடிகர் சித்திரா லக்ஷ்மணன்: "டெல்லி கணேஷ் எங்கே இருந்தாலும் அவரை சுற்றி நண்பர்கள் கூட்டம் இருப்பார்கள். எல்லோரையும் உண்மையாக நேர்மையாக நேசிப்பார். எந்த கதாபாத்திரத்தை எடுத்தாலும் இயல்பாக நடிப்பார். எப்போதும் அவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். இன்று தான் அவர் இருக்கும் இந்த இடம் அமைதியாக உள்ளது" என உருக்கமாகப் பேசினார்.
இயக்குநர் விக்ரமன்: 1996 ஆம் ஆண்டு புதிய மன்னர்கள் படத்தில் அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அந்தப் படத்தில் அவர் கதாபாத்திரம் சிறப்பாக இருக்கும். உன்னை நினைத்தேன் படத்தில் நடித்திருக்கிறார் இதைத் தாண்டி அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு அவரும் நானும் திருநெல்வேலி மாவட்டம்.
20 முதல் 25 நாட்கள் முன்பு வரை கூட சிம்ஸ் மருத்துவமனையில் ஒரு மருத்துவரைப் பார்க்கச் சென்றபோது கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வரை அவருடன் பேசிக்கொண்டிருந்தோம். தலைசிறந்த நடிகர் தெனாலி, அவ்வை சண்முகி என தலைசிறந்த நடிகராக இருந்தவர்.அவரது இறப்பு தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரிய பேரிழப்பு" என தெரிவித்தார்.