கரோனா தடுப்புப் பணிகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்வதற்காக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோர் வந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது, "கரோனா தொற்று காரணமாக ஒரு உயிர் கூட மடியக் கூடாது. ஆனால், தமிழ்நாட்டில் கள நிலவரம் மாறாக உள்ளது. முன்களப் பணியாளர்களின் பணி காரணமாக தொற்றின் பரவல் குறைந்துள்ளது. இருப்பினும், உயிரிழப்பு அதிகரித்து உள்ளது கவலை அளிக்கிறது.
பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும்:
அதிமுக ஆட்சியில் கரோனா பரிசோதனை அதிகமாக செய்தோம். பாதிப்பு அதிகம் இருக்கும் போதே பரிசோதனை 1 லட்சமாக மேற்கொண்டோம். தற்போது பரிசோதனையை 3 லட்சமாக உயர்த்த வேண்டும். 24 மணி நேரத்தில் கிடைக்கவேண்டிய பரிசோதனை முடிவுகள் மூன்று நாள் கால தாமதம் ஆவது சமூகப் பரவலுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும்.
அரசின் தகவலில் முரண்பாடு:
கரோனா பரிசோதனை செய்துகொண்ட நபர்களைத் தனிமைப்படுத்தும் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும். அதுபோன்று கிராமங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் தீவிரமாக நடத்தப்பட வேண்டும். தற்போதைய கள நிலவரமும் அரசு தெரிவிக்கும் புள்ளி விவரமும் வேறு வேறாக உள்ளது. ஆக்ஸிஜன் படுக்கைகளை தேவையான அளவு உருவாக்குவது அவசியம். கரோனா தொற்று காரணமாக, இறந்த நபர்களின் இறுதிச்சடங்கு குறித்த வழிமுறை கேள்விக்குறியாக உள்ளது. தடுப்பூசி குறித்து இளைஞர்களிடம் அதிகம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தடுப்பூசி மையங்களில் கூட்டம் அதிகமாக கூடுவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது" என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, "சிலருக்கு மட்டும் தடுப்பூசிபோட்டுவிட்டு பெரும்பாலான நபர்களுக்கு இல்லை என்று கூறி விடுகிறார்கள். எம்ஜிஆரைக் காண கூட்டம் கூடுவது போல தடுப்பூசி எடுத்துக்கொள்ள கூட்டம் வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தடுப்பூசி குறித்த அச்சத்தை அரசு போக்க வேண்டும்:
தடுப்பூசி அதிகமாக கிடைக்க வழி செய்ய வேண்டும். மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவம் பார்க்காமல் பிரதமரை சந்தித்து, கரோனா ஒழிப்பிற்குத் தேவையான உதவிகளை கேட்டுப்பெற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: தற்காப்புக்கலை பயிற்சியாளரின் நண்பர்களிடம் தீவிர விசாரணை