மதுரை: மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பாக ஜனநாயகத்தின் குரல்வளையை ஜனநாயகத்தின் வழிமுறைகளிலேயே நெறிக்க முயல்கிறதா ஒன்றிய அரசு மற்றும் புதிய குற்றவியல் சட்டத் திருத்தங்கள்: காவிமயமாகிறதா நீதி பரிபாலன முறை? கருத்தரங்கம் நேற்று (செப் 11) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகரும் முன்னாள் IAS அதிகாரியுமான பாலச்சந்திரன், மற்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் கூறுகையில், "ஜனநாயகத்தில் நடக்கும் தவறுகளை ஜனநாயகத்தின் மூலமாக தான் சரி செய்ய வேண்டும்.
மக்களுக்காக தான் சட்டம் உள்ளது அதனை மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். மக்களுக்காக தேவைப்படும் இடத்தில் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. சனாதனத்தை பின்பற்றுவோர் மட்டுமே இந்துக்கள் இல்லை. சனாதன தர்மம், வர்ணாசன தர்மத்தை ஆதரிக்கிறதா என்பது தான் கேள்விக்குறியாக தற்போது உள்ளது.
ஆனால் அதற்கான பதில் யாரிடத்தில் இருந்தும் வரவில்லை. இந்தியா என்பது தான் உலகம் முழுவதும் அறிந்த பெயராக இருக்கிறது. ஆனால் பாரதியார் எழுதிய பாடல்களில் இந்தியா மற்றும் பாரத என்ற வார்த்தைகளை பயன்படுத்தி நாட்டை பற்றிய பாடல்களை பாடியிருக்கிறார்.
இதையும் படிங்க: "ஒரே நாடு ஒரே தேர்தல்" அவசியம் தேவை- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!
அரசியல் அமைப்பு சட்டங்களில் இந்தியா என்ற வார்த்தை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணி இந்தியா என்று பெயரை பயன்படுத்தியதாலோ என்னவோ தற்போது பாரத் என்று ஒன்றிய அரசு அழைக்கிறது. 'ஒரே நாடு ஒரே தேர்தலில்' பல குழப்பங்கள் ஏற்படும்.
சில சட்டமன்றங்கள் கலைக்கப்படுகின்ற போது ஐந்து வருடங்கள் முழுமையாக அவர்களின் ஆட்சி காலம் நிறைவேற்றப்படாது. இந்தி மொழியை பொறுத்தவரை அது நமது இந்தியாவின் மொழியாக உள்ளது. இந்தி மொழிக்கு யாரும் எதிரியாக இல்லை, ஆனால் இந்தி மொழியை அனைவரிடத்திலும் திணிக்கக் கூடாது.
யுனெஸ்கோவில் எட்டு தகுதிகள் இருக்கிற ஒரே மொழி தமிழ் மொழி. ஆனால் அதற்காக இந்திய அரசு நிதி வழங்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. பிரதமர் மோடி ஒவ்வொரு கூட்டத்திலும் திருக்குறளை கஷ்டப்பட்டு பேசி அதனை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். ஆனால் தமிழ் மொழிக்காகவும், வளர்ச்சிக்காகவும் என்ன செய்திருக்கிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் செய்யாமல் பிரதமர் திருக்குறளை மட்டும் மேற்கோள்காட்டி மக்களை ஏமாற்றி வருகிறார். நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளித்தால் பெரும்பான்மையான மக்கள் பேசக் கூடியதாக கூறி வரும் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்" என்றார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலில் பாமக தருமபுரியில் போட்டியிடும் - அன்புமணி ராமதாஸ்!