மதுரையின் பாரம்பரிய பெருமை மிக்க டோக் பெருமாட்டி கல்லூரி தமிழ் துறையின் சார்பாக இன்று பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழ்த்துறைத் தலைவர் கவிதா ராணியின் தலைமையில் பேராசிரியர்களும் மாணவிகள் 180 பேரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
கல்லூரி முதல்வர் கிறிஸ்டினா விழாவை தொடங்கி வைத்தார். அந்த கல்லூரி மைதானத்தில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் விதமாக வாடிவாசல், மாட்டு வண்டி, குதிரை வண்டி, உரிப்பானை, லாந்தர் விளக்கு, அம்மி போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சொட்டாங்கல், பல்லாங்குழி, பாண்டியாட்டம் ஆகியவை மாணவிகளாலும் பேராசிரியர்களாலும் நிகழ்த்தப்பட்டன. மேலும் பறையாட்டம், கும்மி ஆட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் போன்றவையும் மாணவிகளால் நிகழ்த்திக் காட்டப்பட்டன.
கோலப் போட்டியும் நடைபெற்றது. இதில் 47 கோலங்கள் போட்டியில் போடப்பட்டன. 80 மாணவிகள் கலந்துகொண்டனர். நடுவர் குழு சிறந்த கோலம் வரைந்த மாணவிகளைத் தேர்ந்தெடுத்து பாராட்டினர்.
இவ்விழாவில் கலந்துகொண்ட சிங்கப்பூரைச் சேர்ந்த சீன மாணவிகள் சிந்தியா சாஸ், டியோ கூயூ, பெர்னிக் கூயூ ஆகியோர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், தமிழர்கள் பாரம்பரியமாக கொண்டாடப்படும் பொங்கல் விழா கலாசார பெருமைக்கு உரியது. மிக வண்ணமயமான இந்த விழாவை நாங்கள் பெரிதும் ரசிக்கிறோம் என்றனர்.
இதை தொடர்ந்து தமிழ்த்துறைத் தலைவர் கவிதா ராணி பேசுகையில், தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் விதமாக கடந்த பல ஆண்டுகளாக டோக் பெருமாட்டி கல்லூரி தமிழ்த்துறை பொங்கல் விழாவை சீரும் சிறப்புமாக கொண்டாடி வருகிறது. இதன் மூலம் நமது மரபுகளின் பெருமையை இளையதலைமுறை தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இனி வருங்காலத்திலும் இதனை தொடர்ந்து செய்வோம் என்றார்.
இதையும் படியுங்க: நீதிமன்ற வளாகத்தில் சமத்துவ பொங்கல் வைத்த வழக்கறிஞர்கள்!