மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஞாயிறு (டிச.18) அன்று மதியம் 12 மணியளவில் மதுரை மாவட்டம், திருமங்கலம் பெருங்குடி காவல் நிலைய சரகத்தில் உள்ள வளையங்குளம் மும்மூர்த்தி கோயில் அருகே தனிப்படை போலீசார் மிக தீவிரமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகம்படும்படியாக பயங்கர ஆயுதங்களுடன் மறைந்திருந்த 5 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர்.
அவர்களை பிடித்து விசாரித்தபோது, பெருமாள் நகரை சேர்ந்த ராமர் மகன் கருப்பசாமி, பெருமாள் நகரைச் சேர்ந்த காளிமுத்து மகன் காளீஸ்வரன், மாக்காரன்பாறையை சேர்ந்த இராஜாமணி மகன் லெட்சுமனன், பெருமாள் நகரை சேர்ந்த இராமர் மகன் லிங்கப்பெருமாள் மற்றும் மாக்காரன்பாறையை சேர்ந்த இராஜாமணி மகன் சேதுபதி என்ற அஜித்குமார் என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் அவ்வழியாக வருபவர்களிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்ய வைத்திருப்பதாகவும் கூறினர்.
அவர்களிடம் சோதனை செய்தபோது இரண்டு பெரிய வாள் மற்றும் 580 போதை மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும், மதுரை மாவட்டத்தில் இதுபோன்ற திருட்டு, வழிப்பறி, போதைப்பொருள் விற்பனை செய்தல் மற்றும் ரவுடித்தனம் ஆகிய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ’அறிவுசார் சொத்துரிமையில் இந்தியா வல்லரசு ஆகும் வகையில் திட்டம்’