மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கீழஉரப்பனூரில், சௌந்தர் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று, கடந்த சில வருடங்களாக பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனால் மழை நீர் தேங்கி, இந்தக் குவாரி குளம் போன்று நிரம்பியுள்ளதால், விடுமுறை காலங்களில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்களும் சிறுவர்களும் இங்கு வந்து குளிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், திருமங்கலம், சோழவந்தான் சாலை பகுதியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி - விமலா தம்பதியினரின் இரண்டாவது மகன் ராகேஷ் (வயது 16) தனது நண்பர்கள் ஐந்து பேருடன் இங்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென ஆழமான பகுதியில் சிக்கி ராகேஷ் நீரில் மூழ்கி தத்தளித்த நிலையில், அவரது நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
ஆனால் பலனற்று நீருக்குள் ராஜேஷ் மூழ்கிய நிலையில், அவரது நண்பர்களின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினரும், தீயணைப்புத் துறையும் கல்குவாரியில் சிறுவனின் உடலை தேடும் பணியில் ஈடுபடத் தொடங்கினர்.
கடந்த இரண்டு தினங்களாக சிறுவனின் உடலை மீட்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் போராடி வரும் நிலையில், பேரிடர் மீட்பு உபகரணங்கள் கொண்டு வராதது தான் இதற்குக் காரணம் என சிறுவனின் குடும்பத்தினரும் உறவினர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஆக. 31) தீயணைப்புத் துறையினரின் அலட்சியத்தைக் கண்டித்து திருமங்கலம் - மதுரை சாலையை வழிமறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். அதனைத் தொடர்ந்து தகவலறிந்து விரைந்து வந்த திருமங்கலம் நகர் காவல் துறையினர், உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சிறுவனின் உடலை மீட்டுத் தருவதாக உறுதியளித்ததை அடுத்து அப்போராட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.