இதுதொடர்பாக உயிரிழந்த ஜெயராஜின் மனைவி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 19ஆம் தேதி இரவு கடையை விரைவாக அடைக்குமாறு கூறிவந்த சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் எனது கணவர் ஜெயராஜைக் கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.
தகவலறிந்து காவல் நிலையம் சென்ற எனது மகன் பென்னிக்ஸையும் கைதுசெய்து இருவரையும் தாக்கியுள்ளனர். கடுமையாகத் தாக்கப்பட்டதோடு உரிய சிகிச்சையும் அளிக்காமலும் இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி இரவு மகன் உயிரிழந்தார். அதன்பின் 23ஆம் தேதி காலை எனது கணவரும் உயிரிழந்தார். காவல் துறையினர் தாக்கிய காரணத்தின் காரணமாகவே இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இருவரது உடல்களையும் மூன்று மருத்துவர்களுக்குக் குறையாத மருத்துவக் குழுவினர் உடற்கூறாய்வு செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும். மேலும், வீடியோ பதிவு மற்றும் உடற்கூறாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, இருவரது உடல்களையும் மூன்று மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் உடற்கூறாய்வு செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பு: தமிழ்நாட்டில் நாளை முழு கடையடைப்பு !