மதுரை மேலூர் அருகே உள்ள எஸ்.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சத்திய பிரபு - நிவேதா தம்பதி. காதல் திருமணமான இவர்களுக்கு ஆராதனா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது.
லாரி ஓட்டுநராக வேலை செய்துவரும் சத்தியபிரபுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால், நாள்தோறும் வீட்டுக்கு மதுபோதையில் வருவார் எனக் கூறப்படுகிறது.
இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நிவேதா கோபித்துக் கொண்டு சிவகங்கையில் உள்ள தனது தாயார் வீட்டுக்குச் செல்வதும், பின் சமாதானம் பேசி சத்திய பிரபு அழைத்து வருவதும் வாடிக்கையாக இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் 30ஆம் தேதி மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட குழந்தையைத் தூக்கிக் கொண்டு வழக்கம் போலத் தனது தாயார் வீட்டுக்குச் செல்ல நிவேதா முயன்றுள்ளார்.
ஆனால் சத்திய பிரபு குழந்தையைத் தர மறுத்ததால் நிவேதா மட்டும் தனியே தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். அடுத்த நாள் நிவேதிதாவை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அதற்கு நிவேதா மறுப்பு தெரிவிக்கவே, நீ வரவில்லையென்றால் குழந்தைக்கு எலி மருந்து கொடுத்துக் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். எனினும் அவர் வர மறுத்து செல்போனை துண்டித்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து குழந்தையைத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சத்தியபிரவு போன் வந்துள்ளது. இதையடுத்து, பதறி அடித்துக் கொண்டு மதுரைக்குச் சென்றுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஆராதனா சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
இதனால் மனமுடைந்த நிவேதா, தனது குழந்தையைக் கணவன் சத்தியபிரபு கொலை செய்துவிட்டதாக கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து சத்திய பிரபுவைக் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், மனைவியை வர வைப்பதற்காக, குழந்தையுடன் தானும் விஷமருந்தியதாக சத்திய பிரபு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 3 மாதக் குழந்தைக்கு பாலில் விஷம் கலந்துகொடுத்த தாய் கைது!