மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் கிராமத்தில் சரவணன் என்பவரது தோட்டத்தில் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இந்தப் பகுதியில் தென்படும் வெட்டுக்கிளிகள் அதிகப்பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில் இது முழுக்க முழுக்க நாட்டு வெட்டுக்கிளிகள் மட்டுமே. அதனால் இவை ஏற்படுத்தும் பாதிப்பையும், பரவலையும் கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும். ஆதலால் விவசாயிகள் அச்சம் கொள்ள வேண்டாம்.
இது விவசாய பயிர்களை தாக்கியுள்ளதை ஆய்வு செய்துள்ளோம். வேளாண் விஞ்ஞானிகளும் இதை கட்டுப்படுத்த வழிமுறைகளை தெரிவித்துள்ளனர். அதன்படி பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பது, பாதிப்படைந்துள்ள பகுதி முழுவதுமாக வலைகள் அமைக்கப்பட்டு அந்த பகுதிகளிலேயே கட்டுப்படுத்த முடியும் என்பதால் அதற்கான துரித நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது ஆரம்ப கட்டத்தில் உள்ள வெட்டுக்கிளிகள் என ஆய்வில் தெரியவந்தது. அதனால் அவற்றை உடனடியாக விரட்ட தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நண்பனின் நினைவு தினத்தில், தூய்மைப் பணியாளர்களைக் கவுரவப்படுத்திய நண்பர்கள்!