மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை. 29 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பெய்யாத காரணத்தால் வறண்டு காணப்பட்டது. இதனால் இப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வேளாண் நிலம் வறண்டு பாலைவனம்போல காட்சியளித்தது.
விவசாயிகள் குழு அமைத்து வைகை அணையிலிருந்து சாத்தியார் அணைக்கு குழாய் மூலம் நீர் கொண்டுவந்து நிரப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் தற்போது பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக இப்பகுதியில் ஓரளவு மழை பெய்தது.
பின்னர் இப்பகுதி பாசன விவசாயிகள் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சென்று பார்த்தபோது மலையிலிருந்து வரும் நீரை ஒரு சில கிராமத்தினர் தங்கள் பகுதிக்கு அடைத்துவைத்து ஆக்கிரமித்து நீரை திருப்பிவிட்டது தெரியவந்தது. தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சாத்தியார் அணைக்கு நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து நேரடியாகத் தண்ணீர் வர நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் அணை கொஞ்சம் கொஞ்சமாக நிரம்ப ஆரம்பித்தது.
இந்நிலையில் தொடர்ந்து பெய்த பருவமழை காரணமாக நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து விவசாயிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றியதன் காரணமாக மழைநீர் வந்து தற்போது அணை முழுக் கொள்ளளவை எட்டி முழுவதுமாக நிரம்பி மறுகால் செல்கிறது.
இதனால் இப்பகுதியில் சுமார் 2,000 ஏக்கர் நஞ்சை நிலமும் ஆயிரம் ஏக்கர் புஞ்சை நிலமும் பாசன வசதி பெறும். மேலும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து அணைக்கு நீர் வந்துகொண்டுள்ளது.
தொடர்ந்து 11 கிராம பாசன விவசாயிகள், பொதுமக்கள், அலுவலர்கள் எனப் பலரும் அணையை மகிழ்ச்சியுடன் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். நேற்றுமுதல் அணை முழுவதும் நிரம்பி மறுகால் செல்வதால் இப்பகுதி விவசாயிகள் மலர்த்தூவி வரவேற்றனர். விவசாயிகளின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியால்தான் இந்த அணை நிரம்பியது எனப் பலரும் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: 5ஆம் உலகத்தமிழ் மாநாடு! - மதுரையின் கம்பீரமான நாற்பதாண்டு வரலாற்றுத் தடம்!