மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (38) என்பவர், திருமணமான ஒரு மாதத்தில் தனது மனைவியைப் பிரிந்த நிலையில் மாட்டுத்தாவணி அருகே உள்ள பிரபல தனியார் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை அடுத்த அரும்பனூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சனி (25) என்பவர் தனது கணவனைப் பிரிந்து ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையுடன் வாழ்ந்து வரும் நிலையில், ரஞ்சனியும் அதே கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
ஒரே தளத்தில் இருவரும் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 6 மாத காலமாக இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்த நிலையில் இருவரும் ஜவுளிக்கடைக்கான பணியாளர்கள் தங்கும் விடுதியில் தங்கி வந்துள்ளனர். அவ்வப்போது மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.
இதுபோன்று நேற்று (அக்.09) பிற்பகல் தனியார் விடுதியில் அறையெடுத்து இருவரும் தங்கியிருந்தனர். இந்நிலையில், இன்று(அக்.10) காலை அறையிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, விடுதியின் மேலாளர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதூர் காவல்துறையினர், அறையின் கதவை உடைத்துப் பார்த்த போது இருவரும் தற்கொலை செய்து உயிரிழந்த நிலையிலிருந்துள்ளனர். இதனையடுத்து இருவரது உடலையும் கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து இருவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இருவரின் திருமணம் மீறிய உறவு குறித்து, ரஞ்சனியின் வீட்டாருக்குத் தெரியவர, ரஞ்சனியின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த ரஞ்சனி மற்றும் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இரண்டாம் கட்ட விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது காவல் துறை. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னை புறநகர் பகுதிகளில் 324 சாலைகள் மிகவும் மோசம்: அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு!