மதுரை: அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் பேரையூரில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இந்தியாவில் 41 கோடி பேர் முகநூலையும், 53 கோடி பேர் வாட்ஸ்அப்பையும், 45 கோடி பேர் யூ-டியூப்பையும், 21 கோடி பேர் இன்ஸ்டாகிராமையும், 6.5 கோடி பேர் லிங்க்டுஇன்னையும், ட்விட்டரை 1.75 கோடி பேரும் பயன்படுத்துகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியின் அழுத்தத்தாலேயே தடை
அமேசான் பிரைமை 4 கோடி பேரும், நெட்பிளிக்ஸை 30 லட்சம் பேரும் பயன்படுத்துகின்றனர். அந்தளவுக்கு இணையதளம் மக்களை ஊடுருவி உள்ளது. குறிப்பாக 17 கோடி பேர் டிக்டாக் செயலியில் இருந்தனர். டிக்டாக் செயலியைத் தடை செய்ய, எடப்பாடி பழனிசாமி கொடுத்த அழுத்தத்தின் பேரில் செயலி தடை செய்யப்பட்டது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில், இளைஞர்கள் பணத்தை இழந்து உயிரையும் மாய்த்துக் கொண்டனர். இதனைக் கருத்தில் கொண்டு அதனை எடப்பாடி பழனிசாமி தடை செய்தார். அதேபோல் பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டால், மனநிலை பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது என பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக, கடந்த ஆண்டு பப்ஜி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒன்றிய அரசு தடை செய்தது. தற்போது சிறுவர்களை பாதிக்கும் ஃப்ரீபயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகள், பெற்றோர்கள் மத்தியில் மீண்டும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே குழந்தைகளை பாதிக்கும் ஃப்ரீபயர் போன்ற விளையாட்டு செயலிகளைத் தடை செய்ய வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் பவானி தேவி!