மதுரையில் அண்ணா திராவிட கழகத்தின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜேஷ்வரன் செய்தியாளர்களை நேற்று (ஜூன் 10) சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணா திராவிட கழகம் ஆனது தேசிய தேர்தல் ஆணையத்தின் பதிவு பெற்ற கட்சியாக கடந்த வாரம் அங்கீகாரம் பெற்றுள்ளது. இன்றைய சூழ்நிலையில் அண்ணா திராவிட கழகமானது வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் கொண்ட கட்சியாக உள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் டிடிவி தினகரனின் சாயம் வெளுத்துவிட்டது. 18 சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாழ்க்கை இன்றைக்கு கேள்விக்குறியாக மாறியுள்ளது. தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் கதை என்ன ஆனது எனத் தெரியவில்லை.
அதிமுகவுக்கும் மக்கள் ஒரு நல்ல அறிவுரையை வழங்கியிருக்கிறார்கள். அது ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதாகும். அதிமுகவுக்கு தலைமை குறித்து ராஜன் செல்லப்பா கூறிய கருத்துக்கு நான் வரவேற்பு அளிக்கிறேன்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிறப்பாக செயல்பட்டு நல்ல தலைமையை தேர்ந்தெடுத்து உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெற வேண்டும். வலிமையான தலைமை இல்லாத சூழல் உருவாகும்போது நிச்சயமாக அழிவை சந்திக்க நேரிடும்.
தமிழ்நாட்டில் மூன்றாவது அணி என்று ஒன்று கிடையாது. இரு அணிகள் மட்டுமே. தமிழ்நாட்டை என்றும் ஆளும் கட்சியின் கூட்டணி ஆரோக்கியமாக இருப்பதைப் பொறுத்துதான் தேர்தலில் வெற்றி நிர்ணயிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.