மதுரையில் உள்ள தனியார் விடுதியில் எவிடன்ஸ் அமைப்பு சார்பாக மனித உரிமைகள் பாதுகாப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கம் நிறைவடைந்தவுடன் எவிடன்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, "தமிழ்நாட்டில் நடைபெறும் ஆணவப் படுகொலைகளில் 80 விழுக்காடு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை ஆணவப் படுகொலை தொடர்பாக 183 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் மூன்று வழக்குகளுக்கு மட்டுமே தீர்ப்பு கிடைத்துள்ளது. மற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தற்போது தமிழ்நாட்டில் 600 முதல் 300 கிராமங்களில் மட்டுமே தீண்டாமை இருப்பதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இது உண்மைக்குப் புறம்பானது. தமிழ்நாட்டில் சுமார் 35 ஆயிரம் கிராமங்களில் இன்னும் தீண்டாமை உள்ளது. தமிழ்நாட்டில் தீண்டாமை இல்லை எனக் கூறி அதை மறைப்பதை அரசு விட்டுவிட்டு, அவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.