தை பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இயற்கையை போற்றி கொண்டாடும் இந்த நன்னாளில் தமிழர்களின் பாரம்பரிய கலாசார நிகழ்வு நடைபெற்றது. அதேபோன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் கோயம்புத்தூர், ஈரோடு, பெரம்பலூர் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சமத்துவ பொங்கல் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம் சேரன் நகரில் சமத்துவ பொங்கல் வைத்து உறியடி, கபடி, ஓவிய போட்டிகள் நடைபெற்றன. ஈரோட்டில் ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயிலில் 16ஆவது ஆண்டு சமத்துவ பொங்கலை அப்பகுதி மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த சமத்துவ பொங்கல் மூலம் தங்கள் பகுதி மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாலும் இந்த பொங்கல் கொண்டாட்டத்தை விடமுடியாமல் தொடர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடி வருவதாகவும் பொங்கல் வைத்த பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அதேபோன்று பெரம்பலூர் மாவட்டத்தில் இயற்கை வேளாண் குழு சார்பாக வி.களத்தூர் கிராமத்தில் சமத்துவ பொங்கல் சிறப்பாக நடந்தது. இதில், வேளாண்மை மற்றும் நாட்டு மாடுகளின் பங்களிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் துணி பை இயக்கம் சார்பாக துணி பைகள் வழங்கப்பட்டன.
திருப்பூரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் இஸ்லாமிய பெண்கள் உள்பட 550 பெண்கள் பொங்கல் வைத்தும் முளைப்பாரி எடுத்தும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். இதில், பொய்க்கால் குதிரை ஆட்டம், நாட்டுப்புற நடன நிகழ்ச்சி, பறை இசை முழக்கமும் நடைபெற்றது. ‘சாதி, மத வேறுபாடில்லாத சமுதாயத்தை உருவாக்கவே இந்த பொங்கல் கொண்டாடப்படுகிறது என அம்மக்கள் தெரிவித்தனர்.