!மதுரை: திமுகவை எதிர்த்து மாபெரும் அரசியல் இயக்கமாக 1972ஆம் ஆண்டு அதிமுகவை உருவாக்கியவர் எம்ஜிஆர். தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்த திரைப்படத்தின் மூலமாக பொதுமக்களிடம் பெற்றிருந்த நன்மதிப்பை பயன்படுத்தி, அதில் மகத்தான வெற்றியும் கண்டார்.
’ஜெயலலிதா’ எனும் ஒற்றைத் தலைமை
1987ஆம் ஆண்டு எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிளவு கண்டது. இந்தப் பிளவின் காரணமாகத்தான் திமுக தன்னுடைய 10 ஆண்டு கால வனவாசத்தை முடித்து, 1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு ஜெயலலிதா என்ற ஒற்றைத் தலைமையின்கீழ் அதிமுக 1991-1995 காலக்கட்டத்துக்குப் பிறகு 2001-2006ஆம் ஆட்சி புரிந்தது.
முளைவிட்ட சசிகலா அணி
2011ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையின் கீழ் வென்ற அதிமுக, 2021ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தது. இதனிடையே 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக இருந்தபோது, அவரை எதிர்த்து சசிகலா தலைமையில் ஒரு அணி உருவானது. இந்தச் சிக்கலில் பெரும்பான்மை உறுப்பினர்கள் சசிகலாவை ஆதரித்தனர்.
முதலமைச்சரான இபிஎஸ்!
சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட ஆதரவால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். இதனிடையே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளியான சசிகலா சிறை செல்ல நேர்ந்ததது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரண்டு பிரிவாக நின்ற அதிமுக, பிறகு ஒன்றிணைந்தது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், ஓ.பன்னீர் செல்வம் துணை முதலமைச்சராகவும் இருந்தனர்.
சசிகலாவுக்கு முட்டுக்கட்டை!
இந்நிலையில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சற்று முன்பாக சசிகலா சிறையிலிருந்து விடுதலையானாலும், தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில், தன்னுடைய கூட்டணி பலத்தைவிட, அதிமுகவின் பலவீனத்தை சரியாகக் கணித்து திமுக ஆட்சியில் அமர்ந்தது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலிருந்த சமயத்தில் சசிகலாவுக்கு பல்வேறு வகையிலும் முட்டுக்கட்டை போட்டார். குறிப்பாக ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துவதைத் தடுத்தார்.
அதிமுகவின் தோல்வி, சசிகலாவின் மீள்வருகை
அதிமுக 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, அக்கட்சியில் சலசலப்புகள் எழத் தொடங்கின. சசிகலாவை ஜெயக்குமார், முனுசாமி உள்ளிட்ட சிலர் கடுமையாக விமர்சித்தாலும் பிற நிர்வாகிகள் இந்த விசயத்தில் பட்டும்படாமலே இருந்தனர்.
இந்நிலையில் ஒதுங்கியிருந்த சசிகலா அதிமுகவின் தோல்விக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கினார். அதிமுக நிர்வாகிகள் பலரோடு தொலைபேசியில் பேசத் தொடங்கினார். ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி இறந்தபோது நேரடியாகச் சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்வு அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேவர் ஜெயந்திக்கு சசிகலா வருகை
இதற்கிடைய அதிமுக பொதுச்செயலாளர் என்று தனது கையொப்பமிட்ட கடிதங்களை ஊடகங்களுக்கு அனுப்பத் தொடங்கினார். மேலும் அதிமுக கொடி பறக்கும் வாகனத்தில் வலம் வர ஆரம்பித்தார். தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்த சசிகலாவை, அவர் தங்கியிருந்த தனியார் உணவு விடுதியில் பல முக்கியப் பிரமுகர்கள் ரகசியமாக வந்து சந்தித்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகின.
மதுரை, கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க ஜெயலலிதா பயன்படுத்திய தேர்தல் பரப்புரை வாகனத்தில் சசிகலா வருகை தந்தது அதிமுக, முக்கியத் தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
ஓபிஎஸ் சர்ச்சைக் கருத்து
முன்னதாக, முத்துராமலிங்க தேவருக்கு அதிமுக சார்பாக அணிவிக்கப்படும் தங்கக் கவசத்தை வங்கியிலிருந்து எடுத்து தேவர் அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வந்த ஓபிஎஸ், செய்தியாளர்களிடம் பேசும்போது, ”சசிகலாவை அதிமுகவில் சேர்க்க உயர்மட்ட நிர்வாகிகளோடு கலந்து பேசி முடிவு செய்வோம்” என்று மறைமுகமாக தனது ஆதரவை சசிகலாவுக்குத் தெரியப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து கருத்துத் தெரிவித்தார்.
தேவர் ஜெயந்தியைத் தவிர்த்த இபிஎஸ், ஓபிஎஸ்
முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் தவறாமல் பங்கேற்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இந்த ஆண்டு அதனைத் தவிர்த்துள்ளனர். அதிமுகவின் சார்பாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், ராஜன் செல்லப்பா, நத்தம் விஸ்வநாதன், காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.
மேற்கண்ட நிகழ்வுகளெல்லாம் அதிமுக மீண்டும் ஒரு பிளவை நோக்கிச் செல்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் காரணமாக அமைந்துள்ளன. சசிகலா ஆதரவில் ஓபிஎஸ் உள்ளிட்ட சில முக்கிய அதிமுக பிரமுகர்கள் இருந்தாலும், எடப்பாடியை ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் 25க்கும் மேற்பட்டோர் உள்ளனர் என்று எடப்பாடி தரப்பு நிர்வாகிகள் கூறுகின்றனர்.
எடப்பாடி Vs சசிகலா...
எடப்பாடியோ, சசிகலாவோ யாருடைய கை ஓங்குகிறதோ அவர்களுக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற மனநிலையில் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட சிலர் உள்ளனர். இந்நிலையில் சசிகலாவின் அடுத்த கட்ட நகர்வுகள் மேலும் தீவிரமடைய அதிக வாய்ப்பு உள்ளது.
சசிகலாவை தீவிரமாக ஆதரித்து காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றவர்கள்தான் பின்னாளில் அவரை 'வேலைக்காரி' என்ற அளவுக்கு விமர்சனம் செய்தனர். ஆனால், இந்த விமர்சனங்கள் எல்லாம், சசிகலாவின் தீவிர அரசியல் நகர்வின்போது தவிடுபொடியாகிவிடும். அப்போது அவரது தலைமையை ஏற்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள் என்கின்றனர் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர்கள் சிலர்.
ஒற்றைத் தலைமையை முன்னிறுத்தும் சசிகலா
சசிகலாவை பொறுத்தவரை அதிமுக மீண்டும் பிளவுபடாமல், ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்பதையே விரும்புகிறார் என்பதால், எடப்பாடியை சமாதானம் செய்து ஜெயலலிதா காலத்து அதிமுகவாக மீண்டும் விஸ்வரூபமாக்கி விடலாம் என்ற கனவில் இருக்கிறார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி இதுவரை தான் ருசித்து வந்த அதிமுக தலைமையின் சுவையை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுத்துவிடுவாரா என்பது போகப்போகத்தான் தெரியும். கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் இதற்கு என்ன செய்யப்போகிறார் என்பதையும் சசிகலாவின் அரசியல் நகர்வே தீர்மானிக்கலாம்.
அதிமுக பிளவைத் தீர்மானிக்கும் சக்திகள்
தமிழ்நாடு அரசியல் களம் பருவ மழைச் சூழலிலும்கூட கடும் சூடு பறக்க அநேக வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கழுகு போன்று தன்னை பிரதான எதிர்க்கட்சியாக நிலைநிறுத்தும் பணியில் பாஜக இனி தீவிரம் காட்டும்.
அதிமுக மீண்டும் பிளவை நோக்கி நகர்கிறதா… இல்லையா… என்பதை சசிகலா, ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோருடன் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தீர்மானிக்க அதிக வாய்ப்புண்டு.
இதையும் படிங்க: மறைமுக தேர்தலில் திமுக - பாமக மறைமுக கூட்டணி!