மதுரை மாவட்டம், கற்பக நகர் பகுதி குடியிருப்போர் சங்கம் சார்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவில், “மதுரை கற்பக நகர், சங்கர் நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உயர் நீதிமன்ற ஊழியர்களின் குடியிருப்புகள் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே இப்பகுதியில் உள்ள மயானங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு மாநகராட்சியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது மதுரை மாநகராட்சி, தனியார் நிதி உதவியுடன் மின் மயானம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் பாதிக்கப்படுவார்கள்.
மேலும் மயானம் அமைக்கும் பகுதியானது, புதுக்குளம் கண்மாய். இதுபோன்று நீர்நிலைகளில் ஆக்கிரமித்து மாநகராட்சி சார்பில் பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. புதுக்குளம் கண்மாய்க்கு உட்பட்டப் பகுதியில் புதிய கட்டுமானங்கள் கட்டக்கூடாது என உச்ச நீதிமன்ற உத்தரவும் உள்ளது. எனவே, புதுக்குளம் கண்மாயில் அமையவுள்ள மின்சார மயானத்தைக் கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (ஜூன் 30) உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நடைபெற்ற விசாரணையின் முடிவில், “இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதற்கு முன்பும் பின்பும் சில சம்பிரதாயங்கள் செய்யப்படும். இதனாலேயே இறந்த உடல்கள் ஆற்றங்கரையோரம் புதைக்கப்பட்டு அல்லது எரிக்கப்பட்டு வந்தது.
ஆனால், கால மாற்றங்களுக்குப் பின்பு நீர்நிலைகள் வறண்டுவிட்டன. அங்கு காளான்கள் போல் கட்டடங்களும் எழுப்பப்பட்டு விட்டன. உடல்களை எரிப்பதற்கு நீண்ட தூரம் செல்ல மக்கள் விரும்பவில்லை. எனவே குடியிருப்புப் பகுதியில் நவீன எரியூட்டு மையம் அமைவதை தடை செய்ய முடியாது. ஆகையால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பல்துலக்காமல் முத்தம் கொடுத்த கணவன் - தடுத்த கோவை பெண் வெட்டிக்கொலை