மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், கடந்த சில தினங்களாக மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கிறார். இந்நிலையில், விடுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்கள், பணம் உள்ளிட்டவைகளை அவர் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் நான்கு தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், தங்க தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த விடுதிக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அந்த விடுதியில் தங்க தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த அறை மட்டுமல்லாமல் பிற அறைகளிலும் சோதனை மேற்கொண்ட தேர்தல் பறக்கும் படையினர், தங்க தமிழ்ச்செல்வனுக்கு சொந்தமான காரிலும் சோதனை செய்தனர்.
ஒரு மணிநேரம் நடைபெற்ற இச்சோதனையில் எதுவும் சிக்காததால் தேர்தல் அலுவலர்கள் மீண்டும் திரும்பிச் சென்றனர். தமிழ்ச்செல்வன் சொந்த பணியின் காரணமாக வெளியூர் சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் அலுவலர்களின் இந்த திடீர் சோதனை அரசியல் வட்டாரத்தில சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.