மதுரை: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "100 விழுக்காடு வாக்குப்பதிவிற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வாக்குப்பதிவு அன்று தேர்தல் பணிகளில் இருக்கும் அரசு ஊழியர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலமாக செலுத்தும் முறையே நடைமுறையில் உள்ளது.
தபால் வாக்கை பெறுவதற்கு விண்ணப்பம் 12ஐ பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின்னர் தபால் வாக்கை, அதற்கான விண்ணப்ப படிவத்துடன் இணைத்து, உரிய அலுவலரின் ஒப்புதலுடன் அனுப்பவேண்டும். இதற்கான பயிற்சியும் வழங்கப்படும் சூழலில் குறிப்பிட்ட நேரத்திற்குள் எவ்விதமான விண்ணப்பங்களும் தொலைந்து விடாமல் அனுப்புவது மிக கடினமான ஒரு நடைமுறையாக உள்ளது.
பல நேரங்களில் தபால் வாக்குகளே வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கின்றன. அதனால் தபால் வாக்குகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில் தபால் ஓட்டுகளே அதிக அளவில் செல்லாதவையாக வீணாகின்றன. இதனால் 100 விழுக்காடு வாக்குப்பதிவு நடைமுறையில் தொய்வு ஏற்படுகிறது.
ஆகவே 100 விழுக்காடு வாக்குப்பதிவிற்கு துணை புரியும் வகையில், தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் வாக்குகளை தபால் வாக்குகளாக அல்லாமல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இதேபோன்ற வழக்கு ஒன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது எனக் கூறி இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு தலைமை செயலர், மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: இரவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிவோரின் எண்ணிக்கையை சமர்ப்பிக்க ஆணை!