மதுரை: நெருங்கி வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் நேர்காணல் என தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் சார்பாக 100 விழுக்காடு வாக்குப்பதிவை மையமாகக் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மதுரையில் நேற்று கோலப் போட்டிகள் நடத்தப்பட்டு அதன்மூலம் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செல்பி ஸ்பாட் உருவாக்கப்பட்டு அதன் வாயிலாகவும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் தமிழ்நாடு தலைமைச் செயலக வடிவில் மணல் சிற் உருவாக்கியுள்ளனர். அதனை மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அன்பழகன் இன்று பார்வையிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளை, கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து 100 விழுக்காடு வாக்களிப்பிற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.