மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அதிமுக - பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க மக்கள் முடிவெடுத்துள்ளதால் தேனி தொகுதியில்தான் மிகப்பெரிய வெற்றியை பெறப்போவதாகக் கூறினார்.
ஈரோடு அல்லது திருப்பூர் தொகுதிகளில் வேட்பாளராக நிற்க தான் விரும்பியதாகவும், ஆனால் தோழமைக் கட்சிகளுக்கு அந்த தொகுதிகளை வழங்க வேண்டிய சூழல் அமைந்ததால், காங்கிரஸ் தலைமையானது தன்னை தேனி தொகுதியில் போட்டியிட கேட்டுக் கொண்டதாகவும் இளங்கோவன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், சோனியா காந்தியை ஜெயலலிதா விமர்சித்ததால்தான், சோனியா காந்திக்கு ஆதரவாக ஜெயலலிதாவை விமர்சித்ததாகவும், அவர் அரசியலில் ஒரு பெண் சாதனையாளர் என்ற முறையில் தனக்கு ஜெயலலிதா மேல் மிகப்பெரிய மரியாதை உள்ளதாகவும் கூறினார்.
தேனி தொகுதியில் உள்ள வைகையில் தூர்வாரும் பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை ஆகியவற்றை தீர்த்து வைக்க பாடுபடபோவதாகவும், தேனி மாவட்டத்தை சுற்றுலா மையமாக மாற்றும் கோரிக்கையை வெற்றிபெற்றவுடன் நிறைவேற்றுவேன் என்றும் உறுதியளித்தார்.