ETV Bharat / state

ஆறுகள், பறவைகளை காணவும் நேரம் ஒதுக்குங்கள்.. சூழலியல் நடை செல்லும் மதுரைக்காரர்கள்.. சுற்றுச்சூழலியல் சிறப்புத் தொகுப்பு! - புல்லூத்து

'தொன்மையான இடங்களை மட்டுமன்றி ஆறுகள், பறவைகள், தாவரங்களைப் பார்த்து, அவற்றை அறிந்து கொள்வதற்கும் நேரம் ஒதுக்கி, குழந்தைகளை அழைத்துச் செல்வது மிகவும் அவசியம். அப்போதுதான் இயற்கையைப் பற்றிய புரிந்துணர்வு வருங்கால சந்ததியினருக்கு ஏற்படும்' என மதுரையில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பண்பாட்டு சூழலியல் நடை குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு..

madurai eco walk
madurai eco walk
author img

By

Published : Jun 16, 2023, 10:56 PM IST

சூழலியல் நடை செல்லும் மதுரைக்காரர்கள்.. சுற்றுச்சூழலியல் சிறப்புத் தொகுப்பு!

மதுரை: தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குக் குழுவாகச் சென்று பார்வையிட்டு அதன் வரலாற்றுத் தொன்மையை அறிந்து கொள்வது தற்போது அதிகரித்து வருகிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் 'ஹெரிடேஜ்' குழுக்களும் உள்ளன. மதுரையிலும் சில அமைப்புகள் மரபு நடை, பசுமை நடை என்ற பெயரில் மாதம் ஒரு முறை பொதுமக்களை அழைத்துச் சென்று பண்டைய வரலாற்றை அறியச் செய்யும் குழுக்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் மதுரை பண்பாட்டுச் சூழலியல் பேரவை என்ற அமைப்பு, மதுரையின் பல்லுயிர்ச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குப் பொதுமக்கள், மாணவர்கள், துறை சார் வல்லுநர்களை ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்று, அங்குள்ள ஆறுகள், ஓடைகள், பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள், தாவரங்கள், கோவில்கள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பல்லுயிர்ச்சூழலின் அவசியம் குறித்தும் விளக்கி வருகிறது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னால் துவங்கப்பட்ட இந்த நடையின் மூலமாக மதுரை மாவட்டம் நெடுங்குளம், கருங்காலிக்குடி; மஞ்சமலை, மறவபட்டி, அழகர்மலை, திருவாதவூர், வெள்ளிமலை கோவில் காடு, நாகமலை, புல்லூத்து என சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்கண்ட இடங்களுக்குப் பொதுமக்களைப் பயணமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சிவில் சர்வீஸ் பயிலும் மாணவி பிரியதர்ஷினி, 8-ஆம் வகுப்பு மாணவி வர்ஷினி, இல்லத்தரசி மனோன்மணி ஆகியோர் கூறுகையில், “மதுரையிலிருந்து வெறும் 20 கி.மீ. தொலைவிலேயே இதுபோன்ற இடங்கள் உள்ளன என்பதை அறியும்போது மிக வியப்பாகத்தான் உள்ளது. மதுரையிலிருந்தாலும் இந்த இடங்களை அறியாமல் இருந்துவிட்டோமே என்ற வேதனைதான் ஏற்படுகிறது.

இன்றைக்கு நாகமலை புல்லூத்து பகுதியை வந்து பார்வையிட்டபோது, கிருதுமால் ஆறு உருவான இடம் என்பதை அறிந்து மிக மகிழ்ச்சியடைந்தோம். இங்கு அரிய வகை பாம்புகள், பல்லிகள், பட்டாம்பூச்சிகள், விலங்குகள் உள்ளன. அதேபோன்று இதுவரை நாம் பார்த்திராத பல வகை மரங்கள், தாவரங்கள், செடி, கொடிகளைப் பார்க்கும்போது இனம் புரியாத சந்தோஷத்தை உணர முடிகிறது.

இப்பயணத்திற்கு வந்திருந்த குழந்தைகள் மரத்தின் மீது ஏறி விளையாடுவதைப் பார்க்கும்போது நாமே விளையாடுவது போன்ற உணர்வு. எங்களைப் பொறுத்தவரைப் பல்லுயிர்கள் வாழக்கூடிய இந்த இடங்கள் அனைத்தையும் நமது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்பதுதான் ஆசை.

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டு வாழும் பலருக்கும் இப்படியொடு இடம் மதுரையில் இருக்கிறதா என்பதுகூடத் தெரியாது. மேலும் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் நேரடியாகப் பாடம் எடுக்கின்றனர். பாடப்புத்தகங்களில் உள்ளதை நேரில் கண்டு உணர அரிய வாய்ப்பு இது” என்றனர்.

பறவையியலாளரும், அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவருமான பத்ரிநாராயணன் கூறுகையில், “கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பறவைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளாகப் பறவைகளுக்கும் செடிகளுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து ஆய்வு செய்கிறேன். அரிய வகை மரங்கள், செடி-கொடிகளின் விதைகளைக் கண்டறிந்து, அவற்றைப் பள்ளி, கல்லூரிகளில் நட்டும் வருகிறேன்.

செடிகளை நம்பியே பறவைகளும், மனிதர்களும் உள்ளன. ஆகையால் அவற்றின் இருப்பு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மதுரையின் இன்னொரு பெயர் கடம்பவனம். ஆனால், கடம்ப மரம் அருகிப் போய்விட்டது. புல்லூத்தில் நடைபெற்ற இயற்கை நடையின் வாயிலாக, பல்லுயிர்ச்சூழல் குறித்த புரிதலை ஏற்படுத்தியுள்ளோம்.

செல்பேசியையும், தொலைக்காட்சியையும் மட்டுமே பொழுதுபோக்காகக் கருதுகிற இன்றைய சூழலில் இதுபோன்ற இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்கவும் இளந்தலைமுறையினரைப் பயிற்றுவிக்க வேண்டும். தாவரங்களுக்கும், பூச்சியினங்களுக்கும் உள்ள தொடர்பை விளக்கும்போது அவர்கள் இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொண்டு விடுவார்கள்.

ஒவ்வொரு நடையிலும் 80 பேர் வரை பங்கேற்கின்றனர். இந்தப் பகுதியில் மட்டும் 20 வகையான பறவைகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. பல வித்தியாசமான பறவைகளும் இங்கே வாழ்கின்றன. உயிரினச் சங்கிலி எவ்வாறு உருவாகிறது? பிற உயிரினங்கள் மற்ற உயிரினங்களோடு எவ்வாறு ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன என்பதை நேரில் காண்பதன் மூலமே முழுவதுமாக உணர முடியும். அதற்கு இதுபோன்ற நடை பெரிதும் உதவியாக உள்ளது” என்றார்.

ஆனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஹரிபாபு கூறுகையில், “மாணவர்களிடம் பசுமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த என்னையே அவ்வாறு மாற்றிக் கொண்டு பரப்புரை மேற்கொண்டு வருகிறேன். நெகிழியைப் புறந்தள்ளி மரங்களை எவ்வாறெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இளந்தலைமுறையினருக்கு உணர்த்த வேண்டும்.

அசுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டிய நகரச் சூழலிலிருந்து விடுபட்டு, இவ்வாறு இயற்கை சார்ந்த இடங்களுக்கு வரும்போதுதான் தூய்மையான காற்றை நம் உடலுக்காக நாம் பெற முடியும். இருக்கின்ற வளங்களை அப்படியே பத்திரப்படுத்தி அடுத்து வரும் தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அதற்கு இயற்கை சார்ந்த அறிவை நாம் பெற வேண்டும். அதற்கு இதுபோன்ற பல்லுயிர் நடை நமக்கு உதவியாக இருக்கும்” என்றார்.

நறுங்கடம்பு என்ற நூலின் ஆசிரியர் கார்த்திகேயன் பார்கவிதை கூறுகையில், “நாகமலை புல்லூத்து பண்பாட்டு ரீதியிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கிருதுமால், வைகை என மதுரைக்குள் ஓடும் ஆறுகளின் உயிர்ப்புக்கும் இந்த சூழலியல் பகுதி மிக அவசியமானது. தொடர்ச்சியாக மதுரை பண்பாட்டுச் சூழலியல் பேரவையின் சார்பாக நடைபெறும் 5-ஆவது நடையாகும். அடுத்த தலைமுறை மதுரையின் பல்லுயிர் சூழல் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த நடையின் நோக்கம்” என்றார்.

பேரவையின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த தமிழ்தாசன் கூறுகையில், “ஒவ்வொரு மாதமும் இந்தப் பண்பாட்டுச் சூழலியல் நடையை நடத்தி வருகிறோம். மதுரையைச் சுற்றி பல்வேறு பல்லுயிர்ச்சூழல் மிகுந்த இடங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் கண்டறிந்து முழுமையாக ஆவணப்படுத்த வேண்டும் என்பதும் எங்கள் நோக்கங்களுள் ஒன்று.

பல்லுயிர் பண்பாட்டுத் தொடர்புகள் குறித்து ஆவணப்படுத்துவதன் மூலம் அனைவருக்கும் இதன் முக்கியத்துவத்தை அறியச் செய்ய முடியும். ஆவணப்படுத்தி அவற்றைப் பாதுகாப்பதும் மிக மிக அவசியமான செயல். இதனை விழிப்புணர்வாக மக்களிடம் கொண்டு செல்வது அடுத்த செயல்.

அடுத்தபடியாக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று அவற்றைப் பாதுகாக்கக் கோருவது அடுத்த முக்கியக் கடமை என்பதை நோக்கியே இந்த நடையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். புதிய இளைஞர்களை இந்த பார்வைக்குள் கொண்டு வருவதும் மிக முக்கியமானதாகக் கருதுகிறோம்” என்றார்.

கானுயிர் புகைப்படக் கலைஞர் ரவீந்திரன் கூறுகையில், “இயற்கை வளம் என்றவுடன் அனைவருக்கும் கொடைக்கானல், ஊட்டி என்றுதான் பேசுகிறார்கள். ஆனால் மதுரைக்கு அருகிலேயே இதுபோன்ற இயற்கை வளம் கொட்டிக் கிடக்கின்ற ஊர்களும், மலைகளும் அதிகம் உள்ளன. ஆனால் அது குறித்த போதுமான கவனமில்லை.

ஒவ்வொருவரின் வாழ்விடச் சூழலில் என்ன மாதிரியான இயற்கைச்சூழல் உள்ளது. அதை எப்படி மீட்டுருவாக்கம் செய்வது என்பதை அறிவதற்கான முயற்சிதான் இந்தப் பண்பாட்டுச் சூழலியல் பேரவையின் சூழலியல் நடை. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் வருகின்றனர். அவர்கள் ஒவ்வொருத்தரின் அனுபவமே சிறந்த படிப்பினையாக மற்றவர்களுக்கு அமையும். உயிரின பலவகைமையை உணர்வதன் மூலம், இயற்கையை மீட்டுருவாக்கம் செய்வதற்கான படிப்பினையைப் பெற முடியும்” என்றார்.

பேரவையின் மற்றொரு நிர்வாகி விஷ்வா கூறுகையில், “பாம்பு போன்ற விலங்கின மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற காரணத்தால், அவை அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பண்பாட்டுச் சூழலியல் பேரவையை உருவாக்கினோம். அதன் வழியே இந்த இயற்கை நடையையும் செய்து வருகிறோம்.

பொதுமக்களின் இயற்கை சார்ந்த அறிவுத்தேடலுக்கான வழிகாட்டு அமைப்பாக இந்த சூழலியல் நடை உள்ளது. குறிப்பாக சில உயிரினங்கள் சார்ந்த மூடநம்பிக்கைகள் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பட்சத்தில் பல்லுயிர்களின் இருப்பு எத்தனை முக்கியமானது என்பதை அவர்களுக்கு உணர்த்த முடியும் என நம்புகிறோம்” என்றார்.

இதையும் படிங்க: வழி தவறி ஊருக்குள் வந்த குட்டியானை: உணவளித்த பழங்குடியின மக்களின் நெகிழ்ச்சி வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.