மதுரை நகருக்குள் வைகை ஆற்றின் இருபுறமும் சாலையை அகலப்படுத்தும் பணி சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மதுரை ஒபுளா படித்துறை அருகே வைகை ஆற்றின் கரையோரம் சாலையின் நடுவே பாதாள சாக்கடை சந்திப்பு அந்தந்த தெருக்களின் முனையில் அமைந்துள்ளது.
தெருக்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அவ்வப்போது பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு வெளியே நீர் நிரம்பி வெளியேறி சாலையில் ஆறாக ஓடி வைகை ஆற்றில் கலக்கிறது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதுடன் காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய் பரவும் இடர் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் அவ்வப்போது சரிசெய்து கொடுத்தாலும் இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்பவில்லை. எனவே இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கண்டு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.