மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நகரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் நந்தினிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராணுவத்தில் பணிபுரியும் அருண் பாண்டி என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பரில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
இதில் மணமகளுக்கு 5 சவரன் நகையும் 2.5 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருள்களும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு அருண் பாண்டியும் அவரது குடும்பத்தினரும் நந்தினியை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அருண் பாண்டியின் தாய் அல்லிராணி, தந்தை பாண்டி ஆகியோர் நந்தினியின் சகோதரிகள் பிரியங்கா, இலக்கியா ஆகியோரைத் தரக் குறைவாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணமாகி ஒரு மாதத்தில் ராணுவ வீரர் அருண் பாண்டி பணி நிமித்தமாக டெல்லிக்குச் சென்றதாக நந்தினி தெரிவிக்கிறார். இவர்கள் 30 நாள்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்ததாகவும் அவர் கூறுகிறார்.
திருமணம் ஆன புதிதில் பணிக்குச் சென்ற அருண் பாண்டி தற்போது கூடுதல் வரதட்சணை கொடுத்தால் மட்டுமே தன்னுடன் வாழ முடியும், அதன் பின்னரே வீட்டுக்குத் திரும்புவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, திருமணமான ஒரு மாதத்திற்குப் பிறகு தனது பிறந்த வீட்டுக்கே வந்துவிட்டார்.
இது குறித்து கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னதாகவே மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (செப்டம்பர்7) மாலை வாடிப்பட்டி காவல் நிலையத்தில் மணமகன் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளிக்க நந்தினி சென்றுள்ளார்.
அப்போது வாடிப்பட்டி காவல் நிலைய பெண் ஆய்வாளர் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பெண் நந்தினி விஷம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் பெற்றுவருகிறார்.
இது குறித்து சிகிச்சையின்போது நந்தினி பேசிய காணொலியில், தனது கணவனே ஒட்டுமொத்த பிரச்னைக்கும் காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க:திருமணமாகி 17 ஆண்டுகள் கழித்தும் தொடரும் வரதட்சணை கொடுமை