தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அடுத்த கிருஷ்ணாபுரம் கொழும்பு செட்டியார் தெருவைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் லட்சுமணன் (35). திமுக பிரமுகராக இருக்கும் இவர், கிருஷ்ணாபுரத்தில் ஜெராக்ஸ் கடை மற்றும் கணினி மையம் ஒன்றும் நடத்தி வருகிறார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் மற்றும் பாலமுருகன் ஆகியோரிடம், தமிழக அரசுப் பணியில் வேலை பெற்று தருவதாகக் கூறி, தலா 8 லட்சம் ரூபாய் வாங்கியதாகவும், மேலும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவரின் மகள் சித்ரா என்பவரிடமும் 4 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பணம் பெற்றுக் கொண்டு பல மாதங்கள் கடந்தும், அவர்களுக்கு வேலை வாங்கித் தராமல் அலைக்கழித்துள்ளார். அதனை அடுத்து, பணம் கொடுத்த மூவரும் லட்சுமணனைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். பின்னர் தன்னிடம் பணம் கொடுத்த மூவருக்கும் அரசுத் துறைகளில் வேலையில் சேருவதற்கான போலியான பணி நியமன ஆணையை லட்சுமணன் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: சென்னை கனமழை எதிரொலி; குளம் போல் காட்சியளிக்கும் சாலைகள்.. தயார் நிலையில் மீட்புக் குழுவினர்!
அதனை அடுத்து, திமுக பிரமுகர் லட்சுமணன் கொடுத்த ஆணைகளைப் பெற்றுக் கொண்டு, அவர்கள் அரசு அலுவலகங்களில் பணிக்குச் சேர சென்ற போதுதான், அவை போலியானவை என்பது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர், பாதிக்கப்பட்ட மூவரும் கடையநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் ராஜா லட்சுமணனை கைது செய்துள்ளார்.
தொடர்ந்து, லட்சுமணன் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதே போன்று இவர் வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளார், இதே போன்ற சம்பவம் வேறு பகுதிகளில் நடந்துள்ளதா என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் பெயரில் 22 லட்சம் மோசடி - ஜாகுவார் தங்கம் புகார்!