மதுரை: தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச்12) வெளியிட்டார்.
இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் மருத்துவர் சரவணனுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சரவணனுக்கு சீட் வழங்கப்படாததைக் கண்டித்தும், திருப்பரங்குன்றம் தொகுதியினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கியதைக் கண்டித்தும், அவரது ஆதரவாளர்களும், திமுக மகளிர் அணியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், திமுகவிற்கு மீண்டும் திருப்பரங்குன்றம் தொகுதியை ஒதுக்கீடு செய்யவில்லையென்றால், தேர்தல் பணியை புறக்கணிக்க போவதாகவும் கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். வேட்பாளர் அறிவித்த நாளிலேயே திமுகவினர் தங்களது சொந்தக் கட்சிக்கே எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது, அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நல்ல ஆட்சியை மலரச் செய்வது தான் மாற்றம்: சீமான்