மதுரை: கடந்த 2020-ல் மதுரை கீரைத்துறை அருகே முருகானந்தம் என்பவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், மதுரை திமுக பிரமுகர் வி.கே.குருசாமி மகன் வி.கே.ஜி.மணி உட்பட சிலர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த வி.கே.ஜி.மணி, மதுரை நீதிமன்றம் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்ததை அடுத்து, அவரை ஜனவரி 12 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நெல்லை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், வி.கே.ஜி. மணி முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வி.கே.ஜி. மணி மீது மூன்று கொலை வழக்குகள் உட்பட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், மனுதாரரும் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இந்தார் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இந்த வழக்கின் விசாரணையும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர், இந்த வழக்கில் இவர் முக்கிய குற்றவாளி எனவும், முன்ஜாமின் வழங்கக் கூடாது எனறும் கடுமையாக வாதங்களை முன் வைத்தார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்ட வி.கே.ஜி. மணியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ள என கூறி, மனுதாரருக்கு முன்ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.