மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் கலிங்குபட்டி, முண்டுவேலம்பட்டி வரை வைகை அணையிலிருந்து நேரடியாக வாய்க்கால் மூலம் வரும் தண்ணீரால் விவசாயம் செய்யப்படுகிறது. திருமங்கலம் பகுதிகளில் மழையின்றி அனைத்து கண்மாய்களும் வறண்டுள்ளன.
இந்நிலையில், திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்துவிடக்கோரி, இத்தொகுதி விவசாயிகள் பலமுறை அரசு அலுவலர்கள், பொதுப்பணித் துறை, வடிகால் வாரியம், இத்தொகுதி எம்எல்ஏ, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எனப் பலரிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இந்நிலையில், கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி அனைத்து கட்சியினரும் விவசாயிகளும் வரும் 13ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இதனையடுத்து இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், மதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர். அப்போது, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திருமங்கலம் தொகுதி விவசாயிகளை அலட்சியப்படுத்துவதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் பேசியுள்ளனர். இதனை மறுத்த அதிமுகவினர் திமுக, கம்யூ, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்திய பொதுப்பணித் துறை அலுவலர்கள், திருமங்கலம் தொகுதியில் இரண்டு நாள்களுக்கு ஒரு கண்மாய் வீதம் தண்ணீர் திறந்துவிடப்படும் என உறுதியளித்தார்கள். மேலும், அனைத்து கால்வாய்களையும் சீரமைப்பதாக அலுவலர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைத்து கட்சியினர், விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.