மதுரை கேகே நகர் பகுதியில் புதிதாக ஜெயலலிதா சிலையை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் கோ. தளபதி தலைமையில் மாநகர் மாவட்ட திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய கோ. தளபதி, "மதுரை மாநகர் கே.கே. நகர் நுழைவு வாயில் அருகே ஜெயலலிதா சிலையை ஆளுங்கட்சியினர் நிறுவ உள்ளதாக தெரிய வருகிறது. அந்த இடத்தில் ஏற்கனவே எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும், அதன் அருகேதான் மாவட்ட நீதிமன்றமும் அமைந்துள்ளது.
மதுரை மாநகரில் இருந்து திருச்சி, சென்னைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் அந்த வழியாகத்தான் செல்லுகின்றன. ஏற்கனவே நெரிசல் மிகுந்த அப்பகுதியில் சிலையை அமைத்தால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். 2013ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியா முழுவதும் பொது இடங்களில் சிலை அமைப்பதற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதையும் மீறி ஆளுங்கட்சியினர் சிலையை நிறுவ முயற்சி எடுத்து வருகிறார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் சிலையை நிறுவவிடாமல் தடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளோம். முறையான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதி மன்றம் செல்வோம்" என்றார்.
இதையும் படிங்க: கார்ப்பரேட் நலனுக்காக இந்திய கடல்வளத்தை சீரழிக்க உதவும் சட்டம் - நாடாளுமன்றத்தில் சு. வெங்கடேசன் பேச்சு