மதுரை: உச்சப்பட்டியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் என்பவர் திருமங்கலம் அருகே உச்சப்பட்டியில் கிரந்த கல்வெட்டு உள்ளது என கொடுத்த தகவலின்படி, மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து. முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமண மூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சூலாயுதம் பொறிக்கப்பட்டு கிரந்த எழுத்துகளுடன் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டை முறைப்படி எடுத்து ஆய்வு செய்தபோது அது கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என முடிவு செய்யப்பட்டது.
தேவதானம் என்றால் என்ன? இதுகுறித்து உதவிப்பேராசிரியர் முனைவர் து. முனீஸ்வரன் கூறியதாவது, ‘பாண்டியர் ஆட்சிக்காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் தினசரி வழிபாடு செய்வதற்கும், நந்த தீபம் ஏற்றுவதற்கும், சமய சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கும், கோயில் பராமரிப்புகளுக்கும், மன்னர் பல ஏக்கர் நஞ்சை புஞ்சை நிலங்கள் மீது வரியை நீக்கி கோவில்களுக்கு (இறையிலி) தானமாக கொடுத்தார்.
இந்த நிலத்திலிருந்து கிடைக்கும் வருவாயின் மூலம் கோயில் பராமரிக்கப்பட்டது. இவற்றை ’தேவதானம்’ என்று அழைப்பர். தேவதானம் வழங்கப்படும் நிலங்களை அடையாளப்படுத்தும் வகையில் நான்கு மூலைகளில் எல்லைக்கல் நட்டு வைப்பது வழக்கம்.
குறிப்பாக, சிவன் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலதானம் (திரிசூல குறியீடு) திருநாமத்துக்காணி என்றும், பெருமாள் கோயிலுக்கு வழங்கும் நில தானம் ( சங்கு, சக்கரம் குறியீடு) திருவிடையாட்டம் என்றும், சமண கோயிலுக்கு வழங்கும் நில தானம் (முக்குடை குறியீடு) பள்ளி சந்தம் எனவும் அழைக்கப்படும்.
உச்சப்பட்டியில் மருத காளியம்மன் கோயில் அருகே கண்டறியப்பட்ட தனித்தூண் கல்லில் 5 அடி நீளம் 1 ½ அடி அகலம் 3 வரி கிரந்தம் எழுத்துகளுடன் பொறிக்கப்பட்டு இருந்தன. கல்தூணின்கீழ் பகுதியில் சிவன் கோயிலுக்கு நிலதானம் வழங்கியதற்காக திரிசூலம் கோட்டுருவம் செதுக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டின் எழுத்துகள் அதிக தேய்மானம் ஏற்பட்டதால் ஓய்வு பெற்ற கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சொ.சாந்தலிங்கம் உதவியுடன் படிக்கப்பட்டது.
இக்கல்வெட்டில் அவனி, ஸ்ரீமாறன், மடை , தம்மம், அவந்தி, வேந்தன் என தொடர்ச்சியற்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன் ஆட்சி காலம் (பொ.ஆ 835 முதல் 862) பொறிக்கப்பட்டு இருக்கலாம் என்றும், கல்வெட்டின் எழுதியதைப் பொறுத்து அதன் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.
சமீபத்தில் இப்பகுதியில் கி.பி.15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் சிற்பம், விஜயநகர சின்னம் வராகன் கோட்டுருவம் கண்டறியப்பட்டது மற்றொரு சிறப்பு” என்றார்.
இதையும் படிங்க : ராமானுஜரின் 1005ஆவது அவதார பிரம்மோற்சவம்: களைகட்டிய ஸ்ரீபெரும்புதூர் தேரோட்டம்!