மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு மேற்கே சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள வாசிமலைத் தொடரின் அடிவாரத்தில் வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள செம்பாறை, புடவு பாறையில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த எட்டுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன.
பாறை ஓவியங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டுவரும் ஆய்வாளர் காந்திராஜன் இதுகுறித்து கூறுகையில், "பாறையின் முதலாவது தொகுதியில் இரண்டு மனித உருவங்கள் தலையில் தலைக்கவசம் மற்றும் காதணிகளுடனும், கைகளில் ஆயுதங்களின்றியும் கைகளை விரித்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. இந்த மனித உருவங்களுக்கிடையே எதார்த்த நிலையில் மானின் உருவம் தீட்டப்பட்டுள்ளது. இவை கோட்டோவியமாக வரையப்பட்டு பின்னர் வெள்ளை வண்ணத்தால் மிக நேர்த்தியாக நிரப்பப்பட்டுள்ளது.
இந்த ஓவியம் வேட்டைக் காட்சியாக மட்டுமின்றி, மானுடன் மனிதர்களின் உறவை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. பொதுவாக இதுபோன்ற காட்சிகளில் மானை வேட்டையாடுவதைக் காட்டுவதே வழக்கமாக இருக்கும். ஆனால், இவை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள சுமூகமான உறவைக் காட்டும் வகையில் உள்ளது. இந்த ஓவியத்தின் அருகே வரையப்பட்ட பிற்கால ஓவியங்கள் மிகவும் மங்கிய நிலையில் காணப்படுகின்றன. இதன் காலம் மூவாயிரத்திலிருந்து நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கக்கூடும்.
![பழங்குடியின பாறை ஓவியம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-01-rock-painting-vasimalai-hill-script-7208110_06102020073451_0610f_1601949891_698.png)
இப்பகுதியில் ஏற்கனவே நுண்கற்கால கருவிகளும், பெருங்கற்கால தடயங்களும் அதிகளவில் கிடைத்துள்ளன. செம்பாறை புடவு என்ற இந்த குகைத்தளம் பளியர் இன மக்களுக்கு வழிபாட்டுத் தலமாக இருந்துள்ளது. பாறையில் வரையப்பட்டுள்ள உருவங்களை இறை உருவங்களாககக் கருதி மக்கள் வாழ்ந்துள்ளனர். அதேபோன்று வெள்ளைப்பாறை எனுமிடத்தில் உள்ள கன்னிமார் கோயில் பாறை ஒதுக்கில் மூன்று இடங்களில் ஓவியங்கள் ஆங்காங்கே தீட்டப்பட்டுள்ளன.
அருகிலுள்ள பொத்தாம்பாறையின் மேற்கே சுமார் 10 உருவங்கள் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன. மான் மற்றும் மாட்டின் உருவம் பெரிய அளவிலும் அதனருகே யானை உருவமும் காட்டப்பட்டுள்ளது. தெற்கில் சிறிய அளவில் வேட்டை காட்சிகள் வரையப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்களில் இவையிரண்டும் மிகத் தொன்மையான ஓவியங்கள்" என்றார்.
இதையும் படிங்க: தக்காளி விலை திடீர் வீழ்ச்சி : கிலோ 8 ரூபாய்க்கு விற்பனை!