ரம்ஜான் தினத்தை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் ஈதுல்ஃபித்துர் பெருநாள் தொழுகையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இந்தத் தொழுகையில் இயக்குநர் அமீர் கலந்துகொண்டார்.
தொழுகைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு வைத்திருந்து இந்தத் திருநாளை கொண்டாடிவருகின்றோம்.
இந்த நாளில் உலகெங்கும் வாழும் மக்கள் ஒற்றுமையுடனும் சகோதரத்துவம், சமூக நீதி காக்கப்பட வேண்டும் என்பதுதான் மிக முக்கியமான நோக்கம்.
அந்த வகையில் ஜாதி மத வேறுபாடுகளை கடந்து அனைவருடன் நெருக்கமாகவும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும்.
எல்லா இஸ்லாமியர்களும் தங்களின் பகுதிகளில் வசிக்கக்கூடிய ஏழைகளுக்கு எந்த ஒரு ஏற்றத் தாழ்வும் இன்றி உதவி செய்ய வேண்டும் என்று கூறினார்.
மேலும் இயக்குநராக தங்களின் அடுத்த படைப்பு என்னவாக இருக்கும் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, மண்சார்ந்த வாழ்வியலை படமாக பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அந்த வகையில் மீண்டும் 'பருத்திவீரன்' போன்ற படத்தை உருவாக்க வேண்டும் என்று 'சந்தனத்தேவன்' என்ற படத்தை தொடங்கி முதல்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. கூடிய விரைவில் படத்தின் அடுத்தப் பணிகள் முடிவடைந்து திரைக்குவரும் என்றார்.