திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 35ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் பல்வேறு துறையை சார்ந்த ஆயிரத்து 125 மாணவ-மாணவிகள் பட்டங்களை பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து, சென்னை புற்றுநோய் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் சாந்தாவிற்கு கௌரவ டாக்டர் பட்டத்தையும் மத்திய அமைச்சர் வழங்கி கவுரவித்தார்.
இதுகுறித்து விழாவில் பேசிய மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பட்டங்களை பெற்றுள்ள மாணவ-மாணவிகளின் எதிர்காலம் சிறக்க வாழ்த்து தெரிவித்தார். காந்திகிராம பல்கலைக்கழகம் கல்வித் துறையிலும், ஆராய்ச்சியிலும் சிறந்து வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக கூறிய அமைச்சர், கிராம வளர்ச்சி இல்லாத இந்தியா அர்த்தமற்றது என காந்திஜி கூறியதை சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் அடையாளமே கிராமங்களில் தான் உள்ளது என்றும் ஆண், பெண் என அனைவரும் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளில் அவரது கனவை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் தெரிவித்தார்.