மதுரை: அரசின் பல்வேறு சேவைகளுக்கு இ-சேவை மையங்களே உறுதுணையாக இருந்து வரும் நிலையில் மதுரையில் உடனடி வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக வாடிக்கையாளரிடம் 3 ஆயிரத்து 500 ரூபாய் பேரம் பேசிய நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லஞ்சம் வாங்கிய இ-சேவை மைய அலுவலர்:
மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த சாய் கிருஷ்ணன் என்பவருக்கு வாரிசு சான்றிதழை இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க இ-சேவை மையம் சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியிலிருந்த பெண் ஒருவர் உடனடியாக வாரிசு சான்றிதழ் வேண்டுமென்றால் அதற்காக 3 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு சாய் கிருஷ்ணன் தேவையான பணத்தை கொடுத்துள்ளார்.
வாக்குவாதம்:
இருந்தபோதிலும் வாரிசு சான்றிதழ் வழங்குவதில் இ-சேவை மைய அலுவலர் கால தாமதம் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இந்நிலையில் சாய் கிருஷ்ணன் இ-சேவை மைய பெண்ணிடம் வாக்குவாதம் செய்து உள்ளார்.
அப்போது மேற்கண்ட இரண்டு பேர் இடையேயான வாக்குவாதத்தை அங்குள்ள ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: மிளகாய் விற்பனையில் கமிஷன் தருவதாகக்கூறி தொழிலதிபரிடம் ரூ.38 லட்சம் மோசடி; ஒருவர் கைது