திண்டுக்கல் நெய்க்காரன்பட்டியைச் சேர்ந்த கஜா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," நான் நாம் தமிழர் கட்சியின் பழனி மண்டல செயலராக உள்ளேன். தமிழ் கடவுள் முருகன் தொடர்பான பாரம்பரியங்களையும், வழிபாட்டு முறைகளையும் வெளிக்கொணரும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்காக வீரத்தமிழர் முன்னணி எனும் பெயரில் தனி அமைப்பும் உள்ளது. அதனடிப்படையில் நவம்பர் 21ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மாவட்ட புறவழிச் சாலையில் இருந்து, மயில் ரவுண்டானா வழியாக பழனி கோயிலுக்கு வேல் நடைபயணம் செல்ல திட்டமிட்டிருந்தோம்.
இது தொடர்பாக நவம்பர் ஐந்தாம் தேதியே காவல் துறையினரிடம் மனு அளித்தும், கரோனா தடுப்பு நடவடிக்கை ஊரடங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்துவிட்டனர். இது ஏற்கத்தக்கதல்ல.
ஆகவே, அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நவம்பர் 21ஆம் தேதி வேல் நடைபயணம் செல்ல அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிஷா பானு, இது குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.