தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரசுதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில், பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ-பாஸ் தேவையில்லை என குறிப்பிடப்பட்டது.
ஆனால், வெளி மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டினுள் நுழைய இ-பாஸ் முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, மாநிலங்களுக்கிடையே சென்று வர இ-பாஸ் முறை கட்டாயம் என்பதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு இது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.