கன்னியாகுமரி மாவட்டம் இனயத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஜமாத் செயலர் அப்துல் கரீம் உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், ’இனயம் முஸ்லிம் ஜமாத் சார்பில் சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் விதமாகவும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மார்ச் 13ஆம் தேதி இனயம் பாலம் சந்திப்பு அருகே மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். இதற்கு அனுமதி கோரி பிப்ரவரி 28ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் ஆய்வாளரிடம் மனு அளித்த நிலையில் மார்ச் 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்தும் அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல. அனுமதி மறுத்த காவல் ஆய்வாளரின் உத்தரவை ரத்து செய்து இனயம் பாலம் சந்திப்பு அருகே மார்ச் 13 ஆம் தேதி ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதித்து உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பொது அமைதியை கருதி இனயம் பகுதியில் எவ்விதமான பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிப்பதில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி மார்ச் 13ஆம் தேதி இனயம் பகுதிக்கு பதிலாக தேங்காய்ப்பட்டினம் பகுதியில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : புதிய விநியோக கட்டடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ பலராமன்