மதுரை: குயவர்பாளையம் பகுதியில் குடியிருந்து வருபவர் நாகராஜன் (46) மற்றும் இவருடைய மனைவி லாவண்யா (34). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நாகராஜன் பங்குச்சந்தை ஆலோசகராக இருந்து வருகிறார். மேலும் பங்குச்சந்தையில் பல நிறுவனங்களில் நாகராஜனும் முதலீடு செய்துள்ளார். தற்போது ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக இந்தியப் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதில் முதலீடு செய்த பலர் விழிபிதுங்கி நிற்கின்றனர். அந்த வகையில் பங்குச்சந்தையில் நாகராஜனின் ஆலோசனையின்படி முதலீடு செய்த பலர், பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து நாகராஜனிடம் விவரம் கேட்டதாகத் தெரிகிறது. பங்குச் சந்தையில் நாகராஜனும் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
![இந்திய பங்குச்சந்தையில் வீழ்ச்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14623656_t-.jpg)
இந்த நிலையில் வீழ்ச்சியின் காரணமாக மனமுடைந்த நாகராஜன் நேற்று தனது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. குழந்தைகளைப் பள்ளியில் இருந்து உறவினர்கள் அழைத்து வந்து வீட்டில் வைத்திருந்த நிலையில், நாகராஜனை போன் மூலம் தொடர்பு கொண்டனர்.
![பங்குச் சந்தை வீழ்ச்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14623656_.jpg)
மொபைல் போன் அழைப்பை ஏற்காத நிலையில் சந்தேகமடைந்த உறவினர்கள், நாகராஜன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு பூட்டியிருந்தது. இதுகுறித்து தெப்பக்குளம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் கதவைத் திறந்து பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர். இதனையடுத்து, இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து நாகராஜன் மற்றும் அவரது மனைவி லாவண்யாவின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பங்குச்சந்தை வீழ்ச்சியின் காரணமாக இறப்பு ஏற்பட்டதா, அல்லது நாகராஜனின் ஆலோசனைப்படி முதலீடு செய்த யாரோ சிலர் அவருக்கு அழுத்தம் கொடுத்து, அந்த அழுத்தத்தின் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், நாகராஜனை யார் யார் தொடர்பு கொண்டனர் என்பது குறித்தும்; நாகராஜனுக்கு கடந்த சில தினங்களாக மொபைல்போனுக்கு வந்த அழைப்புகள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பங்குச்சந்தை வீழ்ச்சியின் காரணமாகக் கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![தற்கொலையைக் கைவிடுக - CALL 104](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14623656_t.jpg)
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்