மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், "அரசு துறைசார்ந்த பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர், திடீரென்று விபத்தில் இறந்தால் அவருக்கு இழப்பீட்டை யார் தருவது என்பதில் பெரும் குளறுபடி உள்ளது.
இது தொடர்பாக தெளிவாக விதிகள் இல்லை. பல்வேறு வழக்குகளில் விதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக சட்ட ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
சட்டம் இயற்றுவது, விதிகள் உருவாக்குவது, திருத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை சட்ட ஆணையம்தான் முடிவெடுக்கும்.
நாட்டின் 22ஆவது சட்ட ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் உருவாக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள் உள்ளிட்டோரை உறுப்பினராகக் கொண்டது சட்ட ஆணையம்.
ஆனால், சட்ட ஆணையத்திற்குத் தலைவர், உறுப்பினர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால், சட்டம் தொடர்பான பல்வேறு பணிகள் பாதித்துள்ளன. எனவே, சட்ட ஆணைய தலைவர், உறுப்பினர்களை நியமிக்கவும், இழப்பீடு தொடர்பான சட்டத்தை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் மத்திய அரசுத் தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: சட்டவிரோத நிலக்கரி வழக்கு: சிபிஐ அதிரடி!