திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்க வந்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, கப்பலூர் அருகே வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் வரவேற்பு விழா நடைபெற்றது.
இதில் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திறந்த வெளி வாகனத்தில் வந்தனர். பின்னர் பேசிய முதலமைச்சர், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் இன்றைக்கு நிறைவேற்றி வருகின்றோம்.
தமிழ்நாட்டில் ஏழை என்ற சொல்லே இருக்கக் கூடாது என்ற இலக்கை அடைய பயணித்து பல திட்டங்களை அறிவித்து வருகின்றோம். ஆனால், எதிர்க்கட்சி பொய் பரப்புரைகள் செய்தும், அதிமுக அரசு எந்த திட்டங்களையும் அறிவிக்க வில்லை என்று கூறி பல இடையூறுகள் செய்து வருகின்றனர்.
இருந்தபோதிலும் அதிமுக அரசு நான்காம் ஆண்டு அடி எடுத்து வைத்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மேலும், இந்த அரசு மக்கள் படும் கஷ்ட, நஷ்டங்களை சந்தித்து மக்களின் ஒருவனாக இருந்து தீர்த்து வருவதோடு, மக்களின் தேவை அறிந்து செயல்பட்டு வருகிறது.
மேலும், கிராமப்புற மக்கள் சிறப்பான மருத்துவ வசதி பெற வேண்டும் என்பதற்காக டெல்லிக்கு இணையாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீட்டு வசதி வாரியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் - துணை முதலமைச்சர் ஆலோசனை!