தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றுகின்ற கீழடி அகழாய்வு 2014ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் நடைபெற்றுவருகிறது. முதல் மூன்று அகழாய்வுகள் மத்திய தொல்லியல் துறை மூலமாக நடைபெற்றுவந்த நிலையில் 4, 5 மற்றும் 6ஆம் கட்ட அகழாய்வுகள் தமிழ்நாடு தொல்லியல் துறையால் நடத்தப்பட்டுவருகிறது.
கீழடியில் உலகத்தரம் வாய்ந்த கள அருங்காட்சியகம் ரூ.12.21 கோடி செலவில் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்கிடையே கீழடியில் நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருள்களைக் கொண்டு மதுரை கேகே நகரில் அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தற்காலிக அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து பார்வையிட்டுவருகின்றனர்.
இதனையடுத்து நிரந்தர கள அருங்காட்சியகம் அமைப்பதற்கான இட தேர்வுகள் கீழடி, கொந்தகை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவந்தன. இந்நிலையில், கொந்தகை வருவாய் வட்டத்திற்கு உள்பட்ட கீழடி வேல்முருகன் கோயில் எதிரே உள்ள திடலில் நிரந்தர கள அருங்காட்சியகம் அமைப்பது என்று முடிவானது.
இன்று நடைபெற்ற விழாவில், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தொல்லியல் துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முதல் மூன்று கட்ட அகழாய்வினை மேற்கொண்ட மத்திய தொல்லியல் துறை எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்களையும், நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வுகளை மேற்கொண்ட தமிழ்நாடு தொல்லியல் துறை சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்களையும் கண்டறிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தற்போது ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி மட்டுமன்றி கூடுதலாக கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் நடைபெற்றுவருகிறது. தற்போது நடைபெற்றுவருகிற அகழாய்விலும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கல் கட்டுமானங்கள், உலை அடுப்பு, எடைக்கற்கள், தங்க காசு, பானை ஓடுகள், பெரிய விலங்கின் எலும்புக்கூடு ஆகியவற்றுடன், கொந்தகை ஈமக்காடு அகழாய்வில் முதுமக்கள் தாலிகள், முழு அளவிலான ஐந்து எலும்புக்கூடுகள் ஆகியவையும் கண்டறியப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியின் முடிவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக இந்த அருங்காட்சியகம் அமையவுள்ளது. கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைக்கப்படும். கீழடியில் இதுவரை கண்டறிந்த அனைத்துத் தொல்லியல் பொருள்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்படும்'' என்றார். அடுத்த ஓராண்டு காலத்திற்குள் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என தொல்லியல் துறை தரப்பில் கூறப்பட்டது.
இதையும் படிங்க: கீழடியில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த எடை கற்கள் கண்டெடுப்பு!