மதுரையில் சித்திரைத் திருவிழா களைகட்டியுள்ள நிலையில் நேற்று வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். அதன் தொடர்ச்சியாக இன்று வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்ட அழகர் வண்டியூர் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்திற்கு பிற்பகல் 12 மணி அளவில் எழுந்தருளினார்.
சேஷ வாகனத்தில் வந்த கள்ளழகருக்கு தேனூர் மண்டபத்தில் சிறப்பு அலங்காரங்கள் செய்விக்கப்பட்டு கருட வாகனத்துக்கு மாற்றப்பட்டார். பிறகு, மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அழகரின் அருளாசியைப் பெற்றனர். அங்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்ற பின்னர், கள்ளழகர் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தை மூன்று முறை சுற்றி வந்து சரியாக 3.30 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டார். இதற்காக, நூற்றுக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அங்கிருந்து ராமராயர் மண்டபம் நோக்கிச் செல்லும் கள்ளழகர் பல்வேறு மண்டகப்படிகளில் தங்கி இரவு ராமராயர் மண்டபத்தில் நடைபெறும் தசாவதார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு பல்வேறு அவதாரங்களில் காட்சி அளித்துவருகிறார்.