மதுரை: தமிழ்நாடு முழுவதும் குழந்தைத்தொழிலாளர் முறையைத் தடுக்கக்கோரிய வழக்கு குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலச்செயலர், மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறைச்செயலர், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறைச்செயலர், தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அளித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்தியாவில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 29% உள்ளனர். 14 முதல் 18 வயது உள்ள குழந்தைகள் 10% உள்ளனர். குழந்தைகள் பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் இருக்க வேண்டும். ஆனால், வறுமை, பொருளாதார சூழ்நிலை, முறையில்லா வருமானம் போன்ற பல்வேறு காரணங்களினால் குழந்தைகள் வேலைக்குச்சென்று வருகின்றனர்.
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2021ஆம் ஆண்டு CACL என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தமிழ்நாட்டில் 180 சதவீதம் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக, விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் குழந்தைகளை வேலைக்கு வைத்ததாக ரூ.14 லட்சம் வரை அவதாரம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து குழந்தைத்தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 2016 வரை 1,75,000 குழந்தைத்தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்படும்பொழுது மத்திய, மாநில அரசு தரப்பில் அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படுகிறது.
கரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை அதிகரித்து உள்ளது. தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணியாற்றவும், மாடுகள், ஆடுகள் மேய்க்கவும், விவசாயத்திற்காகவும் குழந்தைகளை பணியாற்றுகின்றனர்.
தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தெற்கு தமிழ்நாட்டில் குழந்தைத்தொழிலாளர்கள் முறை அதிகரித்து பல்வேறு வழக்குகள் பதிவாகி வருகின்றன. இப்பகுதியில் சிறப்பு குழந்தைகள் மறுவாழ்வு மையம் அமைத்து மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு பயிற்சிகள் அளித்து, அவர்களுக்கான இழப்பீடுகளை விரைவாக வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்தியா இல்லாமல் உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் குழந்தைத்தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் 180% குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளது என தெரிவிப்பது வேதனை அளிக்கிறது.
வழக்கு குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலச்செயலர், மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறைச்செயலர், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறைச்செயலர், தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:பச்சையப்பன் கல்லூரியின் 254 உதவிப்பேராசிரியர்களின் பணி நீக்கத்துக்குத் தடை!