மதுரை மாவட்டம் ஆண்டார் கொட்டாரம் பஞ்சாயத்திற்குட்பட்ட கொண்டபெத்தான் கிராமத்தைச் சேர்ந்த சந்திரலேகா நகர் பொதுமக்கள், மிகக் கடுமையான வறுமையின் பிடிக்குள் சிக்கித் தவித்து வருகின்றனர். இங்குள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சற்று ஏறக்குறைய இரண்டாயிரம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு ஒரு சமூகத்தைச் சார்ந்த மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் முழு வாழ்வாதாரமும் பாதிப்படைந்துள்ளது. பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகள் மட்டும் ஏறக்குறைய 500க்கும் மேற்பட்டோர் இங்கு உள்ளனர். தற்போது, மிகக் கடுமையான வறுமை சூழலுக்குள் தள்ளப்படும் அபாயத்தில் இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து அந்நகரைச் சேர்ந்த பாக்கியம் என்ற பெண்மணி கூறுகையில், "தமிழ்நாடு அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை தவிர வேறு எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் இலவச பொருட்கள் எதுவுமே எங்களுக்கு கிடைக்கவில்லை. அரசு கொடுத்த உதவி பணத்தை வைத்துக்கொண்டு எத்தனை நாள் நாங்கள் உயிர் வாழ்வது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சலவைத் தொழில், இஸ்திரி போடுதல், வீட்டு வேலைகள், கொத்தனார் பணி போன்றவற்றை செய்கின்ற பல்வேறு கூலித்தொழிலாளர்கள் சந்திரலேகா நகரில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வாழ்க்கைக்கான ஊதியம் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகத்தையும், தமிழ்நாடு அரசையும் சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ராக்கம்மாள் கூறுகையில், "வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்கி கொடுப்பதற்கு கூட எங்களால் இயலாத நிலை உள்ளது. அரசாங்கத்தின் கருணைப் பார்வை எங்கள் மீது படவேண்டும்" என வேண்டுகோள் வைத்தார்.
இவரைத்தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் பேசுகையில், "கடந்த 1979ஆம் ஆண்டு வைகை ஆற்றில் பெரிய வெள்ளத்தின் காரணமாக அதன் கரையோர பகுதியில் குடியிருந்த எங்களுக்கு தற்போதுள்ள சந்திரலேகா நகர் பகுதியைத்தான் ஒதுக்கியிருந்தார்கள். இங்கு குடியேறி 35 ஆண்டுகள் ஆகின்றன. அன்றைக்கு மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகா தான் எங்களுக்கு இந்த இடத்தைப் பெற்றுத் தருவதில் உறுதியாக இருந்தார்.
தற்போது கரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசாங்கம் அமல்படுத்திய ஊரடங்கு உத்தரவை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். அதே நேரம் எங்களது வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதுகுறித்து வண்ணார் பேரவையின் மாநிலத் தலைவர் செல்வராஜ் கூறுகையில், "அரசின் உதவி எந்தவிதத்திலும் எங்கள் பகுதியை எட்டிப்பார்க்காத நிலையில், இங்கு மிகப்பெரிய பட்டினிச்சாவு நிகழ்வதற்கு அதிக வாய்ப்பு உண்டு. அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் மூலமாக அரசாங்கம் சில உதவிகளை செய்துவருகிறது. ஆனால் இங்குள்ள தொழிலாளர்களில் பெரும்பாலானோர் அந்த வாரியத்தில் தங்களது உறுப்பினர் பதவியை புதுப்பிக்கவில்லை.
இதன் காரணமாக வாரியத்தின் நல உதவிகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையை வாரியத்தில் பதிவு செய்யவில்லை என்பதோடு பொருத்திப் பார்க்கக் கூடாது. இங்கு வறுமையின் பிடியில் சிக்கியுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தமிழ்நாடு அரசும் சரி, மாவட்ட நிர்வாகமும் சரி உடனடியாக கைகொடுத்து உதவ வேண்டும். வேறு ஏதேனும் விபரீதங்கள் நிகழாமல் உடன் செயல்பட வேண்டுமென வேண்டி கேட்டுக்கொள்கிறேன்" என்கிறார்.
மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் இந்நேரத்தில் மிகப்பெரிய சேவையை செய்து வருகின்றன. அதேபோன்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரும் துடிப்பான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது எந்தவித அரசின் உதவியும் கிடைக்கப்பெறாத சந்திரலேகா நகர் பகுதி வாழ் மக்களுக்கு அவருடைய கருணை கரங்கள் நீள வேண்டுமென்பதுதான் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவிலிருந்து மளிகைப் பொருள்கள் வருவதில் சிக்கல் - விக்கிரமராஜா!