கடன் தள்ளிவைப்பு காலத்தில் வசூல் செய்யப்பட்ட பணத்தை கடன்தாரர்களுக்கு மத்திய அரசு திரும்பச் செலுத்தியுள்ளது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கடன் தள்ளி வைப்பு காலத்தில் வட்டிக்கு வட்டி போடுவதை எதிர்த்து கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதினேன். இதுதொடர்பாக பலரும் குரல் கொடுத்துவந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்நிலையில், கடன் தள்ளிவைப்பு காலத்தில் வசூல் செய்யப்பட்ட ரூ.4,300 கோடியை 13.12 கோடிக்கும் அதிகமான கடன்தாரர்களின் வங்கி கணக்குகளில் மத்திய அரசு திரும்பச் செலுத்தியுள்ளது. இது கடன் வாங்கிய ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கும், சிறு தொழில் புரிவோருக்கும் நெருக்கடி மிக்க காலத்தில் சிறு நிவாரணமாக இருக்கும்.
தொடக்கத்திலேயே அரசு இதை செய்திருக்க வேண்டும். பேரிடர் காலத்தில் பெரிய மனசு வேண்டாமா? இன்னும் மக்கள் துயர் துடைக்க அரசு செய்ய வேண்டியது ஏராளம். செய்யுமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க :அண்ணா பல்கலைக்கழகத்தில் ரத்தான தேர்வுக்கு கட்டணம் வசூலித்தது செல்லும்!